தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டயர் வெடித்து காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எம்.கல்லுப்பட்டியில் இருந்து தேனி அல்லிநகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு 20-க்கும் மேற்பட்டோர் ஞாயிறன்று வேனில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து மதியம் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கணவாய் மலைப்பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து எதிர்நோக்கி வந்த காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை
இழந்த கார், வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த க.விலக்கு அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (42), சுசிதா (19) மற்றும் வேனில் பயணம் செய்த எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராமர் (21), செல்லமுத்து (29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனும் காரும் மோதிக்கொண்டதில் வேனில் இருந்தவர்கள் சிலர் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் (40), இரமேஷ்குமார் (22), காளீஸ்வரன் (35), மல்லிகா (32), பாப்பா (45), பாண்டியம்மாள் (30), சுந்தம்மாள் (50), ஜோதி (36), சாணார்பட்டியைச் சேர்ந்தமலர் பாண்டியம்மாள் (32), அழகுராஜா (18),சுந்தரமூர்த்தி (41), பழனிவேல் (19), சுந்தரபாண்டி (33), இராக்கம்மாள் (48), சுதாமணி (27) மற்றும் காரில் பயணம் செய்தஆண்டிபட்டியைச் சேர்ந்த வனிதா (27), லோகமணி (71), மீனாட்சி (58),சரிதா (30), ஒச்சம்மாள் (60), துரைப்பாண்டி (37), ஆண்டவர்(55), இந்திரா (45), ஈஸ்வரி (40), பாண்டியம்மாள் (31), யாக்சி (6),தமிழ்ச்செல்வி (50) ஆகிய 27 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் காயமடைந்தவர்களை அந்த வழியாக வந்த வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்களில் ஏற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  படுகாயமடைந்தவர்களில் சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.