திருவாரூர்,
மக்கள் ஜனநாயகத்தின் ஆணி வேராக மதிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தேர்தல் நடத்தாததால் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கும், குறைகளை யாரிடம் சொல்வது என்று மக்களுக்கு புரியாத நிலைக்கும் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூர் மற்றும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆளாகியுள்ளன.

‘அம்மாவின் வழியில் தடம் மாறாமல் நடக்கும் எடப்பாடி அரசு’ உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்துள் ளது. தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் மக்களின் கண்களில் தென்படுவதே இல்லை. இருக்கவே இருக்கிறார் ஊராட்சி செயலர் என்று மக்கள் அவரிடம் முறையிட்டால், அவர் சகட்டுமேனிக்கு அரசாங்கத்தையும் அதிகாரி களையும் ஏற்கனவே ஊராட்சிமன்ற தலைவர்களாக இருந்தவர்களையும் திட்டித் தீர்க்கிறார். பஞ்சாயத்தில் காசு இல்லை என்று சொல்லி கையில் இருந்து காசு செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று பல ஊராட்சிச் செயலாளர்களும் புலம்பித் தீர்க்கிறார்கள்.

தமிழக அரசு 8 சதவீத நிதி மட்டுமே உள்ளாட்சி களுக்கு ஒதுக்கி வருகிறது. தற்போதைய மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதால் உள்ளாட்சி களில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. குடிநீர் தட்டுப்பாடு, சாலைகள் சீர்குலைவு, குப்பைகள் மலையென தேக்கம் உள்ளிட்ட மக்களின் பிரச்சனை கள் அணிவகுத்து நிற்கின்றன. ஏற்கனவே உள்ளாட்சிகளில் ஊழியர்கள் பற்றாக்குறை – குறிப்பாக துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவிற்கு இல்லாமையால் மக்கள் எதுவும் செய்ய முடியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். நிரந்தரப்படுத்தப்படாத துப்புரவு பணியாளர்களும் அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூடத் தராமல் உள்ளாட்சி நிர்வாகம் அவர்களை துன்பப்படுத்துகிறது.

இதுபோன்ற காரணங்களால் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளது. எனவே அதிகாரிகளும் அவர்கள் மனம் போன போக்கில், கேட்பதற்கு ஆளில்லை என்ற நிலையில் அச்சமின்றி செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழக அரசு உண்மையிலேயே மக்களின் மீது அக்கறை கொண்ட அரசாக இருக்குமேயானால் நீதிமன்ற வழக்குகளை நியாயமாக அணுகி குளறுபடிகளை சீர்செய்து உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: