நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறி குமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிராகவும், குளச்சலில் துறைமுகம் அமைக்க வலியுறுத்தியும் (மே 19) சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி உட்பட 1886 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வர்த்தகத் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கை. மீனவர்களையும், பொதுமக்களையும் பாதிக்காத வகையில் அங்கு துறைமுகம் அமைக்க இயற்கை அமைப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இதையே வாக்குறுதியாக அளித்து வந்தன. பாஜக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்துக்கும், கீழமணக்குடிக்கும் இடையே சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு அந்த பகுதி மீனவர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 6 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மீனவர்களும் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, மேலமணக்குடி, கீழ மணக்குடி, சங்குத்துறை கடற்கரை, ஆரோக்கியபுரம், புதுக்கிராமம், குளச்சல் சைமன்காலனி, குறும்பனை, ராஜாக்கமங்கலம் துறை, நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளி என 10 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. மீனவர்களின் மறியல் போராட்டம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 1886 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் 887 பேர் பெண்கள். இவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: