திருப்பூர்,
கொடுமணல் அகழ்வாராய்ச்சி பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் பழங்கால பொருட்களை இளைஞர்கள் மற்றும் வரும் தலைமுறைகள் தெரிந்து கொள்வதற்காக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தமுஎகச திருப்பூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருப்பூர் மாவட்ட 13 ஆவது மாநாடு, வேலம்பாளையத்தில் உள்ள தோழர் சிவசக்தி ராமசாமி நினைவரங்கத்தில் ( அறிவுத்திருக்கோவில் மண்டபத்தில்) ஞாயிறன்று நடைபெற்றது.  இந்த மாநாட்டிற்கு செ.நடேசன், ஆர்.குமார், மா.நாட்ராயன் ஆகியோர் தலைமை குழுவாக இருந்து செயல்பட்டனர். அஞ்சலி தீர்மானத்தை வேலா இளங்கோ வாசித்தார்.எஸ்,தனபால் வரவேற்றார். தமுஎகச மாநில துணை தலைவர் நந்தலாலா மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். பின்னர், கலை இலக்கிய அறிக்கையை பி.ஆர்.கணேசன், பண்பாட்டு அறிக்கையை கோவை சதாசிவம், அமைப்பு நிலை அறிக்கையை ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் முன்வைத்தனர். அறிக்கையின் மீது பிரதிநிதிகளின் விவாதம் மற்றும் தொகுப்புரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருப்பூர் டவுன்ஹால் பகுதியை வர்த்தக பயன்பாட்டிற்காக தருவதை தவிர்த்து கலை இலக்கிய மற்றும் பொதுநல அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு வழங்கவேண்டும்.

மேலும், கூடுதலான கலையரங்கள் அமைக்க வேண்டும். மாவட்ட நூலகங்களிலிருந்து கிராம புற நூலகம் வரை அனைத்து நூலகங்களிலும் தேவையான புத்தகங்களை வாங்கி இணையதள வசதியுடன் மேம்படுத்தி பராமரிக்க வேண்டும். அவிநாசி பகுதியில் சிற்ப கலை கல்லூரி அமைக்க வேண்டும். காங்கயம் காளை உள்ளிட்ட பாரம்பரிய விலங்குகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் அமைக்க வேண்டும். மேலும், கொடுமணல் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் சாய கழிநீர் கலப்பதை தடுத்து, மாவட்டத்தின் நீராதரமான நொய்யல் நதியை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமுஎகச மூத்த நிர்வாகி எஸ்.ஏ. பெருமாள் நிரைவுறையாற்றினார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு ;
இம்மாநாட்டில் மாவட்ட தலைவராகபி.ஆர்.கணேசன், மாவட்ட செயலாளராக ஆர்.குமார், பொருளாளராக என்.ராமசாமி, துணை தலைவர்களாக செ.நடேசன், மா, நாட்ராயன், துணை செயலாளராக தோழன் ராஜா, ராம் ஆனந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஈஸ்வரன், வேலா இளங்கோ உள்ளிட்ட 41 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.