ஊத்துக்குளி,
திருப்பூர்-விஜயமங்கலம் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டிய பாலத்தில் மண் சாலையால் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பிரும் ஊத்துக்குளி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஆர்.குமார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் ஊத்துக்குளி பேரூராட்சியின், திருப்பூர்-விஜயமங்கலம் சாலையில் கடந்த
2 மாதங்களுக்கு முன் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், வடிகால் பணி முடிந்துவிட்டது. தற்போது போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தார் சாலை அமைக்காமல், மண் சாலையாகவே உள்ளது. ஆனால் , தற்போது பெய்து வரும் மழையால் சாலையின் இரு புறமும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், பாலத்தில் போடப்பட்டுள்ள மண் சாலையில் மேடு பள்ளமாக இருப்பதால், மழை நீர் ஆங்காங்கே தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் ஊத்துக்குளி டவுன் திருப்பூர் ரோடு, காவேரி நகர், ஜெஜெ நகர், வெள்ளைக்கவுண்டன்புதூர் பொதுமக்கள் கடந்த 2 மாதமாக மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஊத்துக்குளி நகருக்குள் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையில் இதே அவலநிலைதான். மேலும் நெடுஞ்சாலைதுறை பிரிவு அலுவலத்தின் அருகிலேயே தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்த நெடுஞ்சாலையை சீர்செய்ய, கடந்த 4.5.18 அன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் – அப் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சனியன்று பெய்த மழையால் கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், மக்கள் நலன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், மக்களை திரட்டி சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆர்.குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: