உடுமலை,
குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாக ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கணக்கம்பாளையம் ஊராட்சி. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் சில பகுதிகளுக்கு குடிநீர் சீராக வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. அத்துடன் குடிநீர் இணைப்புகளுக்காக வைப்புத்தொகை பெறப்பட்டு சிலருக்கு ரசீதுகள் வழங்கவில்லை என்றும், குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் பொதுமக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து கணக்கம்பாளையம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த ராஜ்குமார் கடந்த 2 மாதத்துக்கு முன்பு உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபாளையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து, கணக்கம்பாளையம் ஊராட்சியில் 2015–2016–ம் ஆண்டு குடிநீர் இணைப்பு வழங்கிய ஆவணங்களை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது, கணக்கம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்கணக்கம்பாளையம் ஊராட்சியில் முறைகேடு நடந்த போதுஊராட்சி செயலாளராக பணியாற்றிய ராஜ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாம் சாந்தகுமார் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.