பள்ளிப்பாளையம்,
பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கட்டும் பணியால் சமூக விரோதிகளின் புகழிடமாக அரசு பள்ளி மாறி வருகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதி ஆவாரங்காட்டில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பள்ளியில் பின்புற சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனையடுத்து அங்கு மீண்டும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பதிலாக திரை கட்டி மறைத்து வைத்துள்ளனர். இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் சமுக விரோதிகள் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்துதல் போன்ற தகாத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உள்ளது. எனவே இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவரை உடனே கட்ட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் பிரபாகரன் தெரிவித்ததாவது : ஆவராங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து இதுவரை 8 மாதத்திற்கும் மேலாகிறது. இந்த சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும் என வாலிபர் சங்கத்தின் சார்பில் அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து பலமுறை மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வெறும் கண்துடைப்பிற்காக தற்காலிகமாக திரை கட்டி மறைத்து உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் பள்ளியானது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து சுற்றுச்சுவரை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.