விரிசல் விழுந்த கட்டிடம், தண்ணீர் ஒழுகும் ஓடுகள்,சிதிலமடைந்த மதில் சுவர் இவைதான் அரசுப் பள்ளிகள் மீது நம் மனதில் தோன்றும் சித்திரம். ஆனால், விதிவிலக்காக சில இடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்பட்டு வந்தாலும், பெரும்பான்மை அரசு பள்ளிகள் அடிப்படை வசதிக்குகூட இல்லாமல் திண்டாடிவருகின்றது. மேலும், மூக்கை பொத்திக்கொண்டுகூட நுழைய முடியாத கழிவறைகள், மழை பெய்து ஒழுகினால் பக்கத்து வகுப்பறைக்கு சென்று அமர்ந்தாக வேண்டிய நிலைமை என எத்தனையோ இடர்பாடுகளுக்கு மத்தியில் படித்து, சாதனை மனிதர்களாய் உருவெடுக்கும் அரசு பள்ளி மாணவர்களை பாராட்டியாக வேண்டும் இந்த வெளிப்புறத் தோற்றம்தான் அரசுப் பள்ளிகளை அழுக்கானதாகவும், அங்கு படிக்கும் குழந்தைகளை திறமையற்றவர்களாக நினைக்க வைக்கிறது.

ஆனால், தனியார் பள்ளிகளில் படிப்புடன் சேர்த்து நீச்சல், ஸ்கேட்டிங், குதிரையேற்றம், கிரிக்கெட் என பலவகை பயிற்சிகளை அள்ளித்தருகிறோம் என சில லட்சங்களில் விளம்பரம் செய்து, பல கோடிகளை அள்ளிக் குவிக்கின்றன. இந்நிலையில், இன்னும் எத்தனை காலம்தான் பாழடைந்த கட்டிடங்களாகவே அரசுப் பள்ளிகள் இருக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகள் கலர்புல் ஆக மாறினால்தான், குழந்தைகளின் கற்றல் சூழல் இதமாக இருக்கும் என கிளம்பியிருக்றார்கள் இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள். “அரசுப் பள்ளிகளை காப்போம்” என்ற இயக்கத்தை உருவாக்கி, தமிழ்நாடு முழுவதும் பயணித்து, தங்களின் சொந்த செலவில் அரசுப் பள்ளிகளின் சுவர்களை வண்ண வண்ண ஓவியங்களாய் வார்த்தெடுப்பதே இவர்களின் பணி. ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள இந்த பணிக்கு தமிழகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கை காட்சிகள், விடுதலை போராட்ட வீரர்கள், உலகின் சிறந்த ஆளுமைகள், கியூபிஸம், 3-டி ஓவியம் என இந்த ஆசிரியர்களின் கை வண்ணத்தில், ஒவ்வொரு பள்ளிகளும் அசத்தலான தோற்றத்தை கண்டுவருகிறது.

தற்போது திருப்பூர் பெரியார் காலனியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை, வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தவர்களை நேரில் சென்று சந்தித்தோம். நம்மிடம் பேசிய ராஜசேகரன் என்ற ஆசிரியர், ” நான் திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.”பள்ளி கட்டிடங்கள், வகுப்பறைகள் வெறும் சுண்ணாம்பு சுவர்களாய் இருப்பதைவிட, ஓவியங்கள் நிறைந்த வண்ணச் சுவர்களாய் இருந்தால் அது மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்கு உதவியாய் இருக்குமே என சக ஆசிரிய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் இந்த முயற்சிக்கான முதல் விதை போடப்பட்டது. அதன்பிறகு எங்களுக்கு தெரிந்த நன்றாக ஓவியம் வரையக்கூடிய ஆசிரியர்கள் சிலரை ஒருங்கிணைத்து ஒரு குழுவை உருவாக்கினோம்.

அந்தக் குழுவின் மூலம், முதன்முறையாக 2015-ம் ஆண்டு தேனியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஓவியம் வரைந்து கொடுத்தோம். அதற்கு நல்ல பாராட்டுகள் வரவே, அப்போதுதான் இந்த பணியை தமிழகம் முழுவதும் ஒரு இயக்கம்போல செயல்படுத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்னர் அதற்காக ஒரு வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி மும்முரமாக பணியாற்ற துவங்கினோம். எங்களுடைய செயல்
பாடுகளைப் பார்த்து, மேலும் சில ஆசிரியர்கள் எங்கள் குழுவில் இணைந்தார்கள். மேலும்,விருப்பம் இருந்தும் எங்களுடன் பயணிக்க முடியாத ஆசிரியர்கள் பெயிண்ட், பிரஷ் என தங்களால் முடிந்த பொருளுதவிகளை செய்தார்கள்.

ஆனால், ஆசிரியர் பணிக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாத வகையில், அரசு விடுமுறை நாட்கள், பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில்தான் இந்த பணிகளை செய்து வருகிறோம். ஓரு பள்ளிக்கு ஓவியம் வரையச் சென்றால், அங்கு பணிகள் முடியும்வரை அந்த பள்ளியிலேயே தங்கிக்கொள்வோம். தற்போது எங்கள் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என மொத்தம் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மேலும், எங்கள் பணியில் திருப்பூர், கோவை, தேனி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஓவியம் வரைந்து கொடுத்திருக்கிறோம். இன்னும் 17 அரசுப் பள்ளிகளில் ஓவியம் வரைய அழைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த அனைத்து பள்ளிகளையும் வண்ணமயமாக்கி விட வேண்டும் என்பதே எங்கள் திட்டம் என்றார். சுற்றுசுவர்கள் வண்ண ஓவியங்களால் அழகாக்கும் பணியினை செய்து வரும்இவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்

– த.அருண் கார்த்திக்

Leave A Reply

%d bloggers like this: