கோவை மாநகராட்சியிலுள்ள நூறு வார்டுகள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல்கள் முறையாக நடைபெற்று மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் மாநகர மக்களின் அடிப்படை தேவைகள் குறைந்த அளவிற்காவது நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்களின் தேவைகள் குறித்து பேச ஆளில்லாத நிலையே தற்போது உள்ளது.

அதேநேரம், வீட்டுவரி, குடிநீர்வரி, சொத்துவரி, சான்றிதழ் வரி என அனைத்து வரிகளையும் உயர்த்தி கடந்த இரண்டு மாதத்தில் 250 கோடி ரூபாய் வரிவசூல் செய்துள்ளதாக கோவை மாநகராட்சி பெருமிதப்பட்டுக் கொண்டது. இந்த நிலையில், வார்டுகளில் உள்ள பூங்காக்களை பராமரிக்கும் ஊழியர்கள் மற்றும் காவலாளிகளுக்கு மாதக்கணக்கில் ஊதியம் தரப்படாததால் ஊழியர்கள் பூங்காக்களை பூட்டி சாவியை ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து பூங்கா பராமரிக்கும் ஊழியர்கள் கூறுகையில், மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சௌரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகர், சக்தி நகர், உடையாம்பாளையம், மீனாஎஸ்டேட், உப்பிலியபாளையம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 10 பூங்காக்கள் உள்ளது. இந்த பூங்கா காலை 6 மணி முதல் 9 மணிவரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்து வைத்திருப்போம். மற்ற நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் விடுவது உள்ளிட்ட பூங்காவை பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். இப்பகுதியில் உள்ள ஐந்து பூங்காவில் 11 பேர் பணியாற்றி வந்தோம். எங்களுக்கு பூங்காவை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தால் மாதம் 4500 ரூபாய் ஊதியமாக தரப்பட்டு வந்தது. தற்போது ஒப்பந்த நிறுவனங்களின் காலக்கெடு கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பின்னர், மீண்டும் பராமரிப்புக்கு புதிய ஒப்பந்த நிறுவனத்தினர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் எங்களை தற்காலிகமாக தொடர்ந்து பணியாற்றிமாறும், ஊதியத்தை மாநகராட்சியே தருவதாக கிழக்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வரை நடையாய் நடந்தும் எந்த பலனும் இல்லை. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் யார் உங்களை பணியாற்ற சொன்னது என வேலை செய்யச் சொன்னவர்களே திருப்பிக் கேட்கின்றனர். ஆகவே இதனை நம்பியிருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியாது என்கிற நிலையில் கடந்த மாதம் பூங்காவை பூட்டி சாவியை ஒப்படைத்து விட்டோம் என்றனர். இதுகுறித்து சௌரியபாளையம் பகுதியை சேர்ந்த பிஜூ என்பவர் கூறுகையில், நமது வார்டுக்குள் பூங்கா என பெருமையடைந்து வந்த மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டப்பட்டிருக்கும் பூங்காவை கண்டு வெறுப்படைந்து வருகின்றனர். நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டு வருபவர்களும், ஆசுவாசமாக அமர்ந்து பேசி வந்த பொதுமக்களும் தற்போது பூங்காவின் கதவில் தொங்கும் பூட்டை கண்டு மனம் வெதும்புகின்றனர்.

இதற்கிடையே தற்போது கோடை விடுமுறை என்பதால் பூங்காவில் விளையாட வரும் குழந்தைகள் சுற்றுச்சுவரைத் தாண்டி பூங்காவிற்குள் சென்று விளையாடுகின்றனர். குறிப்பாக சமீபத்தில் பெய்த பலத்த மழையால் சௌரியபாளையம் பூங்காவில் மூன்று மரங்கள் விழுந்துள்ளது. மேலும், மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கும் என்கிற சந்தேகம் உள்ளது. இவ்வாறு பராமரிப்பின்றி உள்ள பூங்காவில் குழந்தைகள் செல்வது பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குமோ என்கிற அச்சம் தற்போது எழுந்துள்ளது என வேதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமாரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்கையில், நான் தற்போது தில்லியில் உள்ளேன். பின்னர், தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டார்.

ஸ்மார்ட் சிட்டி நிதியைக் கொண்டு மாநகரம் முழுவதும் பசுமை போர்த்திய நகரமாக மாற்றப் போகிறோம் என அறிவித்த அதிகாரிகள், இருக்கும் பூங்காக்களே மூன்று மாதங்களாக பூட்டியிருப்பது குறித்து எந்த அக்கறையும் காட்டியதாக தெரியவில்லை. இதனால் கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியா அல்லது வேஸ்ட் சிட்டியா என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

– அ.ர.பாபு.

Leave a Reply

You must be logged in to post a comment.