கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஞாயிறன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரே நாளில் 35 பைசா உயர்ந்து 79.13 ஆகவும், டீசல் விலை 28 பைசா உயர்ந்து 71.32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால்தான் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என சப்பை கட்டுகட்டப்படுகிறது. ஆனால் கர்நாடகத் தேர்தலை யொட்டி கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 14ந்தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை தீர்மானிப்பதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.

சர்வதேச சந்தை விலைக்கேற்பவே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கின்றன என்பது உண்மையானால், கடந்த 19 நாட்களாக விலை உயர்த்தப்படாதது ஏன்? தேர்தலுக்காக விலை உயர்வைதவிர்க்க முடியும் என்றால், பொதுமக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு ஏன் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்ற கேள்வி எழுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், கர்நாடக தேர்தலுக்காக சில நாட்கள் விலையை உயர்த்தவில்லை. அதை ஈடுசெய்யவே தினந்தோறும் விலை ஏற்றப்படுகிறது என்று வியாக்கியானம் செய்யப்படுவதுதான். தேர்தலுக்காக விலையை உயர்த்தமாட்டோம். தேர்தல் முடிந்த பிறகு சேர்த்து வைத்து மக்களை தண்டிப்போம் என்பது என்ன நியாயம்?

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சியில் பெட்ரோலுக்கு அரசு விலை தீர்மானிக்கும் முறை விலக்கிக் கொள்ளப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு டீசலுக்கும் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. சர்வதேச சந்தை விலைக்கேற்ப 14 நாட்களுக்கு ஒருமுறை விலை உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தை நிலவரம் என்று கூறிக் கொண்டு விலையை உயர்த்தி மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி வரும் மோடி அரசு, மறுபுறத்தில் உற்பத்தி வரியையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 11.77 காசுகளும், டீசல் லிட்டருக்கு13.47 காசுகளும் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள் ளது. இதனால் 2014-15ல் 99ஆயிரம் கோடியாக இருந்த உற்பத்தி வரிவருவாய் தற்போது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது அரசின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது. இப்போதாவது உற்பத்தி வரியை குறைப்பீர்களா என்று கேட்டதற்கு இயலாது என்றே மத்தியஆட்சியாளர்கள் பதில் சொல்லி வருகின்றனர்.

இப்போது மோடி அரசு செய்து வருவது அப்பட்டமான பகல்கொள்ளையாகும். பெட் ரோல், டீசல் விலை உயர்வதால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. உடனடியாக இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான உள்நாட்டு வரிகளை குறைப்பதன் மூலம் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் அம்பானி போன்ற பெருமுதலாளிகள் கொள்ளையடிப்பதற்காகவே மோடி அரசு இந்த அநீதியை இழைத்து வருகிறது. மக்கள் வீதிக்கு வந்து போராடுவதன் மூலமே இதை தடுக்க முடியும்.

Leave A Reply

%d bloggers like this: