நகரி:
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க, ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
அதனடிப்படையில், 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகானாச ஆகம பரம்பரையை சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை முறை அடிப்படையில் அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர். தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த ரமண தீட்சிதலு இருந்தார்.இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு மற்றும் சீனிவாசா தீட்சிதலு, நாராயணா தீட்சிதலு, நரசிம்மா தீட்சிதலு ஆகிய அர்ச்சகர்கள் கட்டாய ஓய்வு நடவடிக்கைக்கு உள்ளாகினர்.
பணி ஓய்வுக்கான உத்தரவை, ரமண தீட்சிதலுவிடம் வழங்க அவரது வீட்டுக்கு தேவஸ்தான ஊழியர்கள் சென்றபோது அவர் இல்லை. இதனால், ரமண தீட்சிதலு வீட்டின் கதவில் பணி நீக்க உத்தரவு ஒட்டப்பட்டது.

ரமண தீட்சிதலு, கட்டாய பணி ஓய்வுக்கு ஏற்க முடியாது என்று அடாவடியாக கூறி வந்தார். சென்னையில் பாஜக தலைவர்களின் ஏற்பாட்டில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றையும் நடத்தி, அறங்காவலர் குழுவின் முடிவை விமர்சித்தார். பாஜக-வின் தூண்டுதல் பேரிலேயே அவர் இவ்வாறு செய்வதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்தது.ரமண தீட்சிதலு செயலுக்கு பின்னால் மத்திய அரசின் வலுவான தலையீடு இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ஆந்திரப் பிரதேச பிராமின் பரிஷத்தின் சேர்மனுமான வெமூரி ஆனந்த் சூர்யா பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.இதனிடையே மேலும் 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் அந்த அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு உத்தரவு நோட்டீஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருப்பதி கோவில் புதிய தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த வேணு கோபால் தீட்சிதலு நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை அர்ச்சகர்களை பைடிபள்ளி குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ண சேஷாசல் தீட்சிதலு, பெத்திண்ட்டி குடும்பத்தை சேர்ந்த சீனிவாச தீட்சிதலு, திருப்பதி அம்மா குடும்பத்தை சேர்ந்த கோவிந்தராசு தீட்சிதலு ஆகியோர் நியமித்துள்ளனர். மேலும், ஒப்பந்த அடிப்படையில் அர்ச்சகர் பணியில் இருந்த 32 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.