புதுதில்லி:
தேசத்தைக் காட்டிலும், நீதிமன்றத்தைக் காட்டிலும் மோடி உயர்ந்தவர் இல்லை. கர்நாடகத் தேர்தல் மூலம் ஆர்எஸ்எஸ், பாஜக பாடம் கற்று இருப்பார்கள் என நம்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சனியன்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும், ஜனநாயக அமைப்புகளை அவமதித்தும், கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நினைத்திருந்தனர்.மோடியும், அமித் ஷாவும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளையும், மக்களின் விருப்பங்களையும் அவமதித்தார்கள். உச்ச நீதிமன்றத்தை, நாடாளுமன்றத்தை அவமதித்தார்கள். கோவா, மணிப்பூர், மேகாலயா மக்கள் அளித்த தீர்ப்பையும், விருப்பத்தையும் பாஜகவினர் அவமதித்து மாற்றி எழுதினார்கள்.

ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக நாட்டின் ஒவ்வொரு நிர்வாக அமைப்பையும், ஜனநாயக அமைப்பையும், ஒவ்வொருவரையும் அவமரியாதை செய்தார்கள்.
இந்த தேசத்தைக் காட்டிலும், உச்ச நீதிமன்றத்தைக் காட்டிலும், பிற ஜனநாயக நிர்வாக அமைப்புகளைக் காட்டிலும் மோடி ஒன்றும் உயர்ந்தவர் இல்லை.

பணத்தைக் காட்டிலும், அதிகாரத்தைக் காட்டிலும் இந்த தேசம் பெரிது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஒற்றுமை, இன்று பாஜகவை வீழ்த்தி இருக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் நீங்கள் பார்த்தால் தெரிந்திருக்கும், எடியூரப்பா புறப்பட்டவுடன், தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால், பாஜகவினர் அனைவரும் தேசியகீதம் பாடும்போதே வெளியேறிவிட்டார்கள். இதன்மூலம் பாஜகவினர் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கவில்லை என்பது தெரிகிறது.

தென் மாநிலங்களில் அரசியல் நிகழ்வு மூலமும், கர்நாடகத் தேர்தல் மூலமும் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் பாடம் கற்றிருப்பார்கள் என நம்புகிறேன். இனிமேல் மக்களின் விருப்பங்களுக்கு, தீர்ப்புகளுக்கு மாறாக நடக்கமாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.நான் மோடிக்கு சொல்வது என்னவென்றால், இந்த தேசத்தைக் காட்டிலும் நீங்கள் உயர்ந்தவர் இல்லை. இதைப் புரிந்துகொள்வீர்களா என்பது சந்தேகம்தான்.ஜனநாயகத்தில் மோடியின் தலைமை என்பது முன்மாதிரி அல்ல. அது சர்வாதிகாரத்தின் ஒருவடிவம் என்பது நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: