புதுதில்லி:
2017-18 நிதியாண்டில் போதிய விற்பனை வருவாயை ஈட்டவில்லை என்று, ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் கவலைப்பட்டுள்ளது.

மோடி ஆட்சியால் லாபம் அடைந்த சாமியார்களில் முக்கியமானவர் ராம்தேவ். யோகா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிலில் பணம் சம்பாதித்து வந்த அவர், தேன், நூடுல்ஸ், பூஜை சாமான்கள், எண்ணெய், வாசனைத் திரவியங்கள் என கடைசியில் ஜீன்ஸ் பேண்ட், சர்ட் வியாபாரத்திலும் இறங்கினார். பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள் தரம் குறைந்தவையாக இருக்கின்றன என்று தரக்கட்டுப்பாட்டுத் துறை பலமுறை கூறியும் மோடி ஆட்சியின் தயவால் பதஞ்சலி-யின் லாபத்திற்கு ஒரு குறைவும் ஏற்படவில்லை. 2016-17 நிதியாண்டில் இந்நிறுவனம் 111.2 சதவிகித வளர்ச்சியுடன் மொத்தம் ரூ. 10 ஆயிரத்து 561 கோடி பணம் சம்பாதித்து இருந்தது. 2018 மார்ச் மாதம் நிறைவடைந்த ஆண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டவும் பதஞ்சலி இலக்கு நிர்ணயித்திருந்தது.

ஆனால், இதுதான் பிரச்சனையாகி விட்டது. எதிர்பார்த்த லாபத்தை எட்ட முடியவில்லை என்று பதஞ்சலி தற்போது தெரிவித்துள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் விற்பனை சிறப்பாக இல்லை எனவும், பணமதிப்பு நீக்கம், மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தங்களின் இந்த பாதிப்புக்கு முக்கியக் காரணம் என்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குநரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா கவலைப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: