ஒரு கால்பந்து வீரரின் கனவு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் அத்தனைபேரது கனவும் நனவாகுமா? நிச்சயமாக இருக்காது. சிலர் காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாமல் போகலாம். சிலருக்கு தனது நாடு இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற இயலாமல் போவதால் பங்கேற்க முடியாமல் போகலாம்.

ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இயலாமல் போன சில நட்சத்திர வீரர்களைக் குறித்து:
உலகின் முதல்தர கோல்கீப்பர்களில் ஒருவரான இத்தாலியின் ஜியோன்லுஜி பஃபன் இந்த முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட இயலாமல் போனது மட்டுமல்ல.கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துவிட்டார்.சுவீடனுக்கு எதிராக ப்ளேஆப் சுற்றில் இத்தாலி தோற்றதனால் உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற இயலாமல் போய்விட்டது.அதே போல் இத்தாலி அணியின் ஜோர்ஜியோ ஜியோவனி, மார்க்கோ வெராட்டிக் ஆகியோரும் இந்த உலகக் கோப்பை போட்டிகளை வெளியில் இருந்த காணவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டவர்களாவார்கள்.

தென் அமெரிக்க நாடான ஈகுவடார் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற இயலவில்லை. அந்த அணியின் எதிர்ப்பு ஆட்டக்காரரான அன்டோனியோ வாலென்சியா உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழக்கிறார். இவர் எதிர்ப்பு ஆட்டத்தில் வலது விங்கில் இருந்து தனது திறமையை வெளிப்படுத்தக்கூடியவர் ஆவார்.கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் மூன்றாவது இடம் பிடித்த நெதர்லாந்து அணியின் மிகச் சிறந்த எதிர்ப்பு ஆட்டக்காரரான விர்கில் வான் டிஜிக், நெதர்லாந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற இயலாத காரணத்தால் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாமல் போன முக்கியமான வீரராவார்.

இடது பின்களத்தில் விளையாடும் உலகின் மிக முக்கிய 5 வீரர்களில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டேவிட் அலாபா, ஸ்லோவாகியாவின் மாரெக் ஹம்ஸிக் ஆகியோரும் தத்தம் நாடுகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் போனதால் விளையாடும் வாய்ப்பை இழந்து நிற்கிறார்கள்.மாரெக் ஹம்ஸிக் 2010 உலகக் கோப்பை போட்டியிலும், 2016 யூரோ கோப்பைப் போட்டியிலும் விளையாடியுள்ளார். இத்தாலியன் லீக் ஆட்டங்களில் நாபோளி அணிக்காக நடுகளத்தில் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தியவராவார்.2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா சாம்பியனான சிலி இந்த முறை உலகக் கோப்பை போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த இருமுறையும் சிலி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ஆர்த்ரோ விடால், அலெக்ஸ் சாஞ்சஸ் ஆகியோர் பார்வையாளர்கள் வரிசையில் இருக்க வேண்டிய நிலைமை.
கடந்த யூரோ கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டம்வரை முன்னேறிய வேல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் காரெத் பெய்லி ரஷ்யாவில் விளையாட இயலாமல் போவது வேல்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களுக்கே பெரிய ஏமாற்றமாகும்.

4வது உலகக் கோப்பை:

இரண்டாவது உலகப் போரின் காரணமாக 1942 மற்றும் 1946ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. 1950ஆம் ஆண்டு நடைபெற்ற 4வது உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றது. 4வது உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ஜெர்மனி நாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற்று அமெரிக்காவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்று வெளியேறியது. ஒரு ஆங்கிலப் பத்திரிகை அமெரிக்கா 1, இங்கிலாந்து 10 என செய்தி வெளியிட்டிருந்தது. இறுதிப் போட்டியைக் 1,99,854 பேர் வந்திருந்தனர். இது ஒரு சாதனையாகும். இறுதிப் போட்டியில் பிரேசில் – உருகுவே அணிகள் மோதின. பிரேசில் அணி நிர்வாகம் கோப்பை தங்களுக்கே என்ற அதீத நம்பிக்கையில் ஆட்டம் துவங்குவதற்கு முன்பே உலகச் சாம்பியன் என்ற ஸ்டிக்கர் பதித்த கைக்கடிகாரங்களை தனது அணி வீரர்களுக்கு வழங்கியது. ஆட்டத்தின் முதல் கோலை பிரேசில் அணிதான் அடித்தது என்றபோதிலும் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் கோப்பையைத் தட்டிச் சென்றது. மொத்தம் 13 அணிகள் 4வது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.