பெங்களூரு,
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே கர்நாடக முதல்வராக பா.ஜ.க.வின் எடியூரப்பா நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அவா் தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னதாக கா்நாடகாவில் வெற்றி பெற்ற 222 சட்டமன்ற உறுப்பினா்களும் காலை 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனா்.

முதல்வா் எடியூரப்பா முதலில் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடா்ந்து முன்னாள் முதல்வா் சித்தராமையா சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடா்ந்து பிற சட்டமன்ற உறுப்பினா்களும் பொறுப்பேற்று வருகின்றனா். சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகா் கே.ஜி.போபையா பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், காங்கிரஸ், மஜத கட்சியினா் தங்கள் கட்சி உறுப்பினா்கள் பா.ஜ.க. வசம் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றனா். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினா்களான பிரதாப் கௌடா, அனந்த் சிங் இருவரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சோமசேகர் ரெட்டியும் இதுவரை பதவி ஏற்கவில்லை. இந்நிலையில் சோமசேகர் ரெட்டி பிடியில் பெங்களூரில் உள்ள கோல்ட் பின்ச் ஓட்டலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் கௌடாவும் அனந்த சிங்கும் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்களை மீட்க டிஜிபி பெங்களூரு காவல் ஆணையர் ஆகியோர் கோல்ட் பின்ச் ஓட்டலுக்கு விரைந்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காணாமல்போனதாக கூறப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ பிரதாப் கவுடா பேரவைக்கு வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply