பெங்களூரு:
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அஞ்சி, அதற்கு முன்னரே சனியன்று (மே 19) மாலை, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கர்நாடக சட்டசபையை விட்டு ஓட்டம் பிடித்தார் எடியூரப்பா.

கர்நாடகத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாத போதிலும், ஆளுநர் வஜுபாய் வாலா எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது காங்கிரஸ். ஆளுநர் கொடுத்த 15 நாள் அவகாசத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் ஒரே நாள் அவகாசத்தில் அதாவது, சனி மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.அதன்படி சனி காலை 10.30க்கு கர்நாடக சட்டமன்றம் கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகரான போபையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

தொடர்ந்து முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்புக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் ஆகியோர் வரவில்லை. பாஜக எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டியின் சகோதரரான சோமசுந்தர ரெட்டியும் பதவியேற்பில் கலந்துகொள்ளாத நிலையில், இவரின் பிடியில் கோல்டு ஃபிஞ்சு ஹோட்டலில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் உள்ளதாகத் தகவல் வெளியானது.

இதனையடுத்து ஹோட்டலின் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் ஹோட்டலில் இருந்து வெளியேறி காரில் சென்றார். ஆனால் அவர் சட்டமன்றம் செல்லவில்லை. கடைசி நேரத்தில் காவல்துறை பாதுகாப்புடன் சட்டப்பேரவைக்கு வந்தார் பிரதாப் கவுடா எம்.எல்.ஏ. அங்கு அவருக்கு உணவு வழங்கப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார், “நான் உறுதியாகச் சொல்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே எடியூரப்பா ராஜினாமா செய்து விடுவார்” என்றார். “பிரதாப் கவுடா வந்துவிட்டார். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார்”என்றும் கூறினார்.

அமித் ஷாவுக்கு அலைபேசி
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் அறையில் எடியூரப்பாவும், மத்திய அமைச்சர் அனந்த குமாரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் எடியூரப்பா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அதில் எடியூரப்பாவையே இறுதி முடிவெடுக்க அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அறையில் தற்காலிக சபாநாயகர் போபையாவை சந்தித்த எடியூரப்பா அவருடன் ஆலோசனை நடத்தினார்.எடியூரப்பாவே பேசிய பேரம்
இதற்கிடையில் சனி மதியம் சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்கும்போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.சி. பாட்டீலுடன் முதலமைச்சர் எடியூரப்பா அலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி கர்நாடக மக்களை மட்டுமல்ல இந்திய அளவில் பல தலைவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
(விபரம் 8)

மீண்டும் கூடியது சட்டப்பேரவை
உணவு இடைவேளைக்குப் பிறகு சட்டப்பேரவை 3.30மணிக்கு மீண்டும் கூடியது. எம்.எல்.ஏ.க்களின் பதவியேற்பு நிகழ்வு மீண்டும் தொடங்கியது. அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் ஆகியோர் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்து நிகழ்வுகளைப் பார்வையிட்டனர். கடைசி நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கும் சட்டமன்றத்திற்கு வருகை தந்து காங்கிரஸ் உறுப்பினர் அமர்ந்துள்ள பகுதிக்குச் சென்று அமர்ந்தார்.

எடியூரப்பா ராஜினாமா
இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய எடியூரப்பா, “பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகப் பிரச்னைகளை தீர்த்து வைக்கக் கோரி எனக்கு வாக்களித்துள்ளனர். பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் விரும்பி வாக்களித்துள்ளனர். தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ்-மஜத குறுகிய கால கூட்டணி அமைத்துள்ளன” என்று தெரிவித்தார். எடியூரப்பாவின் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி மட்டுமே பேச வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.மேலும் பேசிய எடியூரப்பா “கடைசி மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன். மாநிலம் முழுவதும் மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். விவசாயிகள் முன்னேற்றம் அடையாமல் கண்ணீர் வடிக்கின்றனர். எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. எத்தனை இடங்கள் என்பது முக்கியம் அல்ல. ஆட்சியை இழப்பதால் நான் எதையும் இழந்துவிடப் போவதில்லை. என் வாழ்க்கை என்பது கர்நாடக மக்களுக்காகவே. நான் மாநிலம் முழுதும் பயணித்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றேன். இனியும் தொடர்ந்து பயணிப்பேன். இந்த முதல்வர் பதவியை இழப்பதால் எனக்கும் ஒன்றும் நட்டமில்லை’’ என்று தனது ராஜினாமாவை அறிவித்தார்.

ஓட்டம்
மேலும், “நான் உறுதி கூறுகிறேன். வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நாங்களே ஜெயிப்போம். அதுவரை ஓயமாட்டேன், தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன். முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகவே பாடுபடுவேன்’’ என்று முடித்துவிட்டு விறுவிறுவென வெளியே கிளம்பிச் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் கர்நாடக ஆளுநர் மாளிகைக்குச் சென்று தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார் எடியூரப்பா.

Leave a Reply

You must be logged in to post a comment.