பாக்தாத்:
இராக்கில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் ஷியா ராணுவத் தலைவர் மோக்டடா சதர் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.மோக்டடா சதரின், சேய்ரோன் கூட்டணி 54 இடங்களைப் பெற்றுள்ளது. தற்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் கட்சி 42 இடங்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது என தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி முடிவுகள் கூறுகின்றன.அமெரிக்காவின் நீண்ட கால எதிரியான மோக்டடா சதர், தேர்தலில் போட்டியிடாததால் பிரதமராக முடியாது.ஆனால், புதிய அரசை அமைப்பதில் முக்கிய பங்கை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளராக தன்னைக் காட்டிக்கொண்ட அவர், ஈரான் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பவர்.

கடந்த டிசம்பர் மாதம் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக இராக் அறிவித்த பின்னர் நடந்த முதல் தேர்தலாகும்.இராக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆறு மதச்சார்பற்ற குழுக்கள் ஆகியவற்றுடன் சதரின் இஸ்டிகாமா கட்சி கூட்டணி வைத்தது. இக்கூட்டணி ஈரான் ஆதரவு ஃபடாஹ் கூட்டணியை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது.ஊழல் குறித்து மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் தற்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் கூட்டணி தோல்வியை சந்தித்தது.ஊழலுக்கு எதிராகப் போராடுவது மற்றும் பொது சேவைகளில் முதலீடு செய்வது ஆகியவற்றை முன்வைத்து சதரின் கூட்டணி பிரச்சாரம் செய்தது.தேர்தலில் பிரதமர் அபாதியின் கட்சி மோசமாக செயல்பட்ட போதிலும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீண்டும் பிரதமராகலாம்.

யார் பிரதமரானாலும், ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்து மீண்ட இராக்கின் மறு கட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் உள்ளது.கடந்த மே 12-ம் தேதி நடந்த தேர்தலில் 44.5சதவீத வாக்குகளே பதிவாகின. முந்தைய தேர்தலில் பதிவான வாக்குகளை விட இது மிகவும் குறைவாகும்.

Leave A Reply

%d bloggers like this: