நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் வழங்காத, குமரி மாவட்ட இயற்கை வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வகையில் மணக்குடி கோவளம் பகுதியில் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்கக்கூடாது, ஒக்கி புயல் நிவாரணங்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் சனிக்கிழமையன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஜகவினர் குமரி பெட்டக துறைமுகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தினால் நாங்கள் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம் எனக்கூறி சனிக்கிழமையன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடும் பதற்றம் ஏற்பட்டது. மாவட்ட காவல் துறையும் பாஜகவினருக்கு சாதகமாகவும், ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும் அனைத்துக் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். ஆனால் அனைத்துக் கட்சியினர் சார்பில் கண்டிப்பாக துறைமுக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடையை மீறி நடத்துவோம் என அனைத்து கட்சியினர் அறிவித்தனர். எனவே அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை மாவட்டத்தில் 34 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டது. சனிக்கிழமையன்று காலை நாகர்கோவிலில் செட்டிக்குளம், டெரிக் சந்திப்பு, ஒழுகினசேரி உட்பட 6 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கடும் சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து மனோ தங்கராஜ், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ் குமார், பிரின்ஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை காவல் துறையினர் தடுக்க முயற்சித்தனர். ஆனால் அனைத்துக் கட்சியினர் தடைகளை அகற்றிவிட்டு முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் தள்ளியதில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கீழே விழுந்தார். இதனையடுத்து அனைத்துக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி , 5 சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். நாகர்கோவில் நகரினுள் போராட்டத்திற்காக வந்தவர்களை காவல் துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதில் 200 பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மணக்குடி, கன்னியாகுமரி, கோவளம், சங்குதுறை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மக்களை காவல்துறையினர் அந்த பகுதிகளிலேயே மடக்கி தடுத்தனர். இதனால் மணக்குடி, கன்னியாகுமரி, சங்குதுறை, கோவளம், சைமன் காலனி உள்ளிட்ட 8 இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.