உடுமலை,
உடுமலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஐஸ்வர்யா நகரில் தனி யாருக்கு சொந்தமான ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது.கடந்த சில நாள்களாக பெய்த மழையால் இந்த ரத்த வங்கி வளாகத்தில் இருந்த மரங்கள் சாலையில் விழுந்தன. இதைத் தொடர்ந்து, உடுமலை அருகில் உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன். ரத்த வங்கி வளாகத்தில் விழுந்து கிடந்த மரங்களை வியாழனன்று வெட்டி அகற்றிக் கொண்டிருந்தார்.அப்போது அப்பகுதியில் இருந்த மின்சாரக் கம்பி மீது மரக் கிளைகள் விழுந்ததில் ஆனந்தன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை காவல்துறையினர் ஆனந்தன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை அறிந்த ஆனந்தனின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடுமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது:
ஆனந்தன் உயிரிழந்த பின்னர் முறைப்படி எங்களுக்குத் தகவல் அளிக்காமல் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும், மின் வாரியத்திடம் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டும் பணிகளை மேற்கொள்ளச் சொன்னது தவறாகும். எனவே இதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.பின்னர், அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.