திருப்பூர்,
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சமீப காலமாக சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வினைக் கொடுத்து வரும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் இந்த ஆண்டு வெளிநாட்டு வர்த்தகம் 15 சதவிகிதம் குறைவு என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. பிறநாடுகளை ஒப்பிடும்போது இந்திய பின்னலாடை ஏற்றுமதி சரிவை சந்திப்பது வேதனை அளிக்கிறது. தொடர்ந்து நூல் விலை உயர்வு, அரசு மானியங்கள் குறைப்பு, வங்கி வட்டி விகிதம் அதிகரிப்பு போன்ற காரணங்களுடன், பின்னலாடை உற்பத்திக்கான உபதொழில்களின் கட்டண உயர்வும் சேர்ந்து கொண்டு பின்னலாடை வர்த்தகத்தை மேலும் குறையும் நிலைக்கு தள்ளியுள்ளது.

எனினும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கும் போக்கு தொடர்கிறது. இந்த பின்னடைவு வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும் நிலை நிச்சயம் உருவாகும்.எனவே, ஜவுளித்துறைக்குத் தேவையான சலுகைகள், வரிச் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கி உதவினால்தான் பிறநாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி வர்த்தகத்தினை அதிகப்படுத்த முடியும். தற்போது பின்னலாடைத் தொழில் இருக்குமா, இருக்காதா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள், ஜவுளித்துறை அமைப்புகள் மற்றும் திருப்பூர் பின்னலாடைத் துறை அமைப்புகள் ஒருங்கிணைந்து இதற்கான தீர்வினை மேற்கொள்ளும் முயற்சிகளை எடுத்தால்தான் இத்தொழிலைக் காப்பாற்ற முடியும். எனவே அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட முன்வருமாறு டீமா சார்பில் எம்.பி.முத்துரத்தினம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.