உதகை,
பார்ப்போர் மயங்கும் வண்ணம் மலர்க்காட்சி அமைந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.

122 ஆவது உதகை மலர்க்காட்சியை வெள்ளியன்று துவக்கி வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: இயற்கை அன்னை ஈன்றெடுத்த அற்புதங்கள் ஏராளம். உலகின் ஒட்டுமொத்த அழகும், அற்புதங்களும் இந்த உதகையில் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. சிகரங்கள், பள்ளத்தாக்குகள், மலைமுகடுகள், நீர்த்தேக்கங்கள், நீர் வீழ்ச்சிகள், மலர்த் தோட்டங்கள், சிற்றோடைகள், பூங்காக்கள், படகு இல்லம், நீர் மின் நிலையங்கள் என்று கண்களையும், மனதையும் இந்த உதகைமண்டலம் குளிர வைக்கின்றது. இங்கு இன்றளவும் வாழ்ந்து வரும் இருளர், குறும்பர், பணியர், தோடர், கோத்தர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடியினராலும், படுகர் இன மலைவாழ் மக்களாலும் இப்பகுதியின் பழமையும், பண்பாடும் காக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகம் என்பது நமக்கெல்லாம் பெருமையாக இருக்கின்றது. இந்த 122 ஆவது மலர்க்காட்சியில் 10 ஆயிரம் சர்பரா மற்றும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 9 அலங்கார வளைவுகள், ஆர்கிட் மலர்களால் ஆன பட்டாம்பூச்சியின் உருவ அமைப்பில் அமைந்த நுழைவு வாயில், 1500 ஆர்கிட்ஸ் மற்றும் 1000 கார்னேஷன் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கார்டூன் பொம்மை, 1 லட்சம் கார்னேஷன் மலர்களைக் கொண்டு தத்ரூபமாக உருவாக்கப்பட்ட மேட்டூர் அணை, 800 கார்னேஷன் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மிக்கி மவுஸ் உருவம் ஆகியவை அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துலிப், டிஸ்பக்ஸ், கேளா லில்லி, போன்ற மலர்களாலும், சிலிகோனிய மலர்கள் உட்பட 25 ஆயிரம் பலவண்ண பூந்தொட்டிகள், கண்ணாடி மாளிகையில் உள்ள 5 ஆயிரம் பூத்தொட்டிகள் என்று பார்ப்போர் மயங்கும் வண்ணம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை வடிவமைத்த வேளாண் துறையைச் சார்ந்த அலுவலர்களுக்கு இந்த நேரத்திலே பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்கையை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி தேவை. அந்த மகிழ்ச்சி எங்கே கிடைக்கும் என்று சொன்னால், இயற்கையில் தான் கிடைக்கும். அந்த இயற்கையான சூழலை இங்கே உருவாக்கித் தந்திருக்கின்றார்கள். பார்க்கின்ற இடங்களெல்லாம் மலர்களாக காட்சியளிக்கின்றது, அந்த கண்கவர் மலர்களெல்லாம் இன்றைக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய இந்த தாவரவியல் பூங்காவிலே நாம் பார்க்க முடிகின்றது என்பதை நான் இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.