தாராபுரம்,
நூறு நாள் வேலை திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர், முன்னாள் தலைவர் மீது பொதுமக்கள் புகார் கூறி மனு அளித்தனர்.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சி தெக்காலூர் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், சமூக தணிக்கை சிறப்பு அலுவலர் தனலட்சுமி, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்ட ஆண்டு தணிக்கை அறிக்கையில், பொதுமக்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் எத்தகைய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து கூறினார். தொடர்ந்து பொதுமக்கள் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக குறைகள் மற்றும் புகார்களை கூறலாம் என அறிவித்தார்.

இதையடுத்து ஊர்பொதுமக்கள் சார்பில், கடந்த 6 மாதமாக நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்குவதில்லை. குறிப்பிட்ட 20 பேருக்கு மட்டும் தான் தொடர்ந்து வேலைவழங்கப்படுகிறது. மேலும், செட்டிகளம் பகுதியில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்ட அட்டையை கணக்கு பார்ப்பதற்காக கூறி, பஞ்சாயத்து செயலாளர் வாங்கி சென்று 3 மாதங்கள் ஆகிறது. இப்போது அட்டை தொலைந்து விட்டதாக அலட்சியமாக பதில் கூறுகிறார். மேலும், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சித்ரா மற்றும் அவரது கணவர் பழனிச்சாமி ஆகியோர் வேலை செய்யாமலேயே, கடந்த நிதியாண்டில் பழனிச்சாமிக்கு ரூ.9ஆயிரத்து 45 ம், சித்ராவிற்கு ரூ.19ஆயிரத்து 450 ம் தொகை வழங்கப்பட்டுள்ளது. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கிய இவர்களிடம் இருந்து தொகையை பறிமுதல் செய்யவேண்டும் என்றனர்.

மேலும்,செட்டிகளத்தில் மின் மோட்டார் பழுதடைந்து 3 மாதங்கள் ஆகிறது. அண்மையில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு மனு அளிப்போம் என அறிவித்தபோது, அதிகாரிகள் தலையீட்டு சமாதானம் செய்து 2 நாட்களில் மோட்டார் பழுது நீக்கப்படும் என கூறினர். ஆனால், இதுவரை மோட்டார் சரிசெய்யவில்லை என்றனர். தொடர்ந்து பொதுமக்கள் குறைகளை கூறிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், சமூக தணிக்கை சிறப்பு அலுவலர் தனலட்சுமி, பொதுமக்கள் நூறுநாள் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தபோது, சமாதானம் அடையாமல் தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். பின்னர், பஞ்சாயத்து செயலாளர், முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என கூறினார். ஆனால்,பொதுமக்களை சமாதானம் அடையவில்லை. மேலும், பொதுமக்கள் ஆவேசமாக பேசியதால், பதில்கூறிய அலுவலர் தனலட்சுமி மயக்கமடைந்து கீழே விழுந்தார். பின்னர், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் தண்ணீர் தெளித்து அலுவலக அறைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து, தாராபுரம் பிடிஓ சிவக்குமார், கிராம ஊராட்சி பிடிஓ ராகவேந்திரன், மண்டலஅலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் பொதுமக்களிடம் செட்டிகளத்திற்கு புதிய மோட்டார் 3 நாட்களில் பொருத்தப்படும் மற்றும் இதர கோரிக்கைகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.