நீலகிரி மலையில் ஆண்டு முழுமையும் இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையாகவே இருக்கும். மார்ச் முதல் மே வரையிலும் கோடை காலம் என்ற போதிலும் கோடையின் தாக்கம் சுமாரகவே இருக்கும். இதமான குளிரும், மிதமான வெயிலும் இருக்கும். இதற்காகவே சுற்றுலா பயணிகள் குவிந்து விடுவார்கள். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் மழை இருக்கும். தொடர்ச்சியாக மழை இந்த காலத்தில் பெய்து கொண்டே இருக்கும்.

செப்டம்பர் முதல் நவம்பர் வரைவசந்த காலமாக மிகவும் ரம்மியமாக இருக்கும். இதை இரண்டாம் சீசன் என்போம். இந்த காலத்திலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலும் பணிக்காலம். இக்காலத்தில் பனிப்பொழிவு இருக்கும். இடங்கள் பணியால் சூழப்பட்டிருக்கும். மாலை 4 மணிக்குள் வேலைகளை முடித்து வீட்டுக்குள் வந்து விட வேண்டும். காலை 10 மணி வரையிலும் வெளியே வர முடியாது. சில வருடங்களில் ஒரு மாதம் வரையிலும் சூரியனைப் பார்த்திராத காலங்களும் உண்டு். இது தான் நீலகிரி மாவட்டத்தின் இயற்கையான பருவ நிலை. இவ்வாறு மாற்றி மாற்றி பருவ நிலைகள் இருந்தபோதிலும் எந்தவித தொற்று நோய்களும் வந்ததில்லை.

அப்போது, உதகைக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து நாளொன்னு 10 அல்லது 15 பேருந்துகள் மட்டுமே சென்று வரும். அதுவும் மேட்டுப்பாளையத்தை கடந்து பர்லியை எட்டும்போதே அடர்ந்த பாக்கு மரங்கள். தேயிலை மரங்களின் வாசனைகளும். வாழை. பூக்கள் போன்றவைகளின் ரம்மியமான காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கும். உதகை மலை முழுவதும் தேயிலை மரங்களும், பலா உள்ளிட்ட காட்டு மரங்களும், மூலிகைச் செடிகளும் என இருபக்கமும் அடர்ந்து காணப்படும். இயற்கையான சுனை நீர்களும், மழையிலிருந்து ஓடி வரும் நீர்களும் நீர் வீழ்ச்சிகளாக ஆங்காங்கே பாய்ந்தோடும்.அன்றைக்கு சுனை நீர்களே கிராமங்களின் நிர் ஆதராமாக இருந்தன.

தேயிலை தோட்டங்களில் தேயிலை பெருவாரியாக விளைந்தன. இன்று தேயிலை உற்பத்தி விழ்ச்சியடைந்துவிட்டது. மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு காட்டின் அடையாளம் மாறிவிட்டது. யானை, புலி, சிறுத்தை, மான், குரங்கு உள்ளிட்ட வன விலங்குள் சுதந்திரமாகவும், இயற்கையோடும் இணைந்து வாழ்ந்து வந்தன. விலங்குகளால் மனிதர்களுக்கோ அல்லது மனிதர்களால் விலங்குகளுக்கோ எந்த ஆபத்தும் நேர்ந்ததில்லை.ஆனால், இன்று சரணாலயம் என்ற பெயரால் காடுகளில் இருந்து மலை வாழ் மக்களும், விலங்குகளும் விரட்டியடிக்கப்பட்டு சொகுசு பங்களாக்களும், விடுதிகளும் ஏற்படுத்துப்பட்டுள்ளன. பருவ காலங்கள் மாறி சமவெளிப் பகுதிகளைப் போலவே கோடை வெளியிலின் தாக்கம் உதகையிலும் எட்டிவிட்டது. வரைமுறையற்ற கட்டிடங்கள். வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக கட்டப்பட்டதால் காடுகள் அழிக்கப்படுகிறது. இயற்கையோடு வாழ்ந்தால் இயற்கை அன்னை நம்மை பாதுகாக்கும் அதை நம் சுயநலத்திற்காக நாசப்படுத்தினால் வாழ்க்கையும். இயற்கையும் மோசமாகும் என்பதை வாழ்க்கை உணர்த்தியுள்ளது.

-வி.வி.கிரி. உதகை.

Leave a Reply

You must be logged in to post a comment.