கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொலை
மிரட்டல் விடுத்த 5 நிருபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆங்கிலோ இந்தியன் பெண்மணி ஒரு குரங்கை துப்பாக்கியில் சுட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்ணின் வீட்டு வேலைக்காரர் கொடுத்த தகவலையடுத்து முக்கிய தொலைக்காட்சியின் நிருபர்கள் மற்றும் ஒரு தினசரி நாளிதழின் நிருபர் எனக்கூறி 5 பேர் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று ரூ.10
லட்சம் வரை கேட்டு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கொடைக்கானலைச் சேர்ந்த 3 நிருபர்களும், திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 நிருபர்களும் அடங்குவர்.

இந்நிலையில் வேலைக்காரன் கட்டப்பஞ்சாயத்து செய்வது போல் நிருபர்களை சமாளிக்க, இருக்கிற பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் தன்னிடம் இருந்த பணம் நான்கரை லட்சம் ரூபாயை முதல்கட்டமாக கொடுத்தனுப்பியுள்ளார். இதனையடுத்து மீதிப்பணம் ஐந்தரை லட்சம் ரூபாயை கேட்டு மீண்டும் ஐந்து நிருபர்களும் சென்றுள்ளனர்.

அப்போது அந்த பெண்மணி தர மறுக்கவே 5 நிருபர்களும் அந்த பெண்மணி கழுத்தில்
கத்தியை வைத்து கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இந்நிலையில் ஆங்கிலோ இந்தியன் பெண்மணி தூதரகத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது வீட்டுக்கு வந்து மிரட்டிய நிருபர்கள் யார் யார் என்று அவரது வீட்டில் பதிவான சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட தூதரகம் நடவடிக்கை எடுக்க சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும்
சென்னை காவல்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து நிருபர்களை கைது செய்ய
உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த நிருபர்கள் தொடர்பாக அவர்கள் பணியாற்றும் ஊடகங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமையன்று 2 நிருபர்களை வேலையிலிருந்து
நீக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக 5 நிருபர்களும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் நிலை உள்ளது. நிருபர்கள் தலைமறைவாகியும் உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.(நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.