திருப்பூர்,
காவிரியில் தினந்தோறும் நீர்ப்பங்கீடு செய்யும் முறையை அமல்படுத்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  காவிரியில் மாதந்திர நீர் பங்கீட்டை 10 நாட்களாக குறைத்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதேசமயம் தினந்தோறும் நீர் பங்கீடு செய்வதுதான் காவிரி பிரச்சனைக்கு இறுதித் தீர்வாக இருக்கும். தமிழக அரசு தினந்தோறும் நீர்ப்பங்கீடு முறையைத் தீர்ப்பில் இடம் பெறச் செய்ய உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.மேலும் கர்நாடகாவின் காவிரியிலும், கிளை நதிகளிலும், பாசனக் கால்வாய்களிலும் ஏராளமான நீரேற்று பாசனங்கள் உள்ளன. பெரிய, பெரிய குழாய்கள் பதித்து, ராட்சத மின் மோட்டார் கொண்டு கிலோமீட்டர் கணக்கில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 20ஆயிரம் ஏரி, குளம், குட்டை, கண்மாய்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் காவிரி தீர்ப்புக்குப் புறம்பாக 50 டிஎம்சி நீர் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்தினால் மட்டுமே நீர் பங்கீடு சாத்தியம் என்றும் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

கரும்பு சாகுபடி:
தமிழகத்தில் கரும்பு சாகுபடியை வெகுவாகக் குறைத்து மழையை நம்பி வளரும் பனை நடவை கூட்ட வேண்டும். தமிழகத்தில் தற்போது இருக்கும் 46 சர்க்கரை ஆலைகளில் 2 பொதுத்துறையிலும், 16 கூட்டுறவு துறையிலும் மீதி தனியார் வசமும் உள்ளன. இவைகளின் எண்ணிக்கையையும், அறவைத் திறனையும், கரும்பு சாகுபடி பரப்பளவையும் குறைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவு குறைக்க முடியும் என்று செ.நல்லசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.