மேற்கு தொடர்ச்சியின் மிக நீண்டமலைப் பகுதியான நீலகிரி மலையானது, இயற்கையின் வனப்புக்களை கண்டு களிப்பதற்கான பேரழகு மட்டுமல்ல, மனிதனின் அத்தியாவசியத் தேவையான விவசாயம், குடிநீர், மின்சாரத் தேவைகளையும் நீலகிரி மலை தாயுள்ளத்தோடு வழங்கி வருகிறது. நீலகிரி மலைத்தொடரின் மிக நீளமாக நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழைநீர் 28 நீர்வழிகளில் பயணிக்கின்றன. குந்தா காடுகள் நிறைந்த பள்ளத்தாக்குகள், பரந்த பள்ளாத்தாக்கு, மலைத் தொடர்கள் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றன. முக்குருத்தி, பைகாரா, பார்சன் பள்ளத்தாக்கு, எமரால்டு, அப்பர் பவானி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள் நீர் பிடிப்புப் பகுதிகளாக உள்ளன.

இவ்வாறு 28க்கும் மேலான அணைக்கட்டுகளில் மழைநீர் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஆணைகளின் நீர் நீலகிரி மாவட்டத்தின் குடிநீர், விவசாய தேவைக்கு மட்டுமின்றி சமவெளிப் பகுதியான கோவை,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான பிரதான ஆதாரமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக கோவை மாநகரத்தின் அத்திக்கடவு குடிநீர் திட்டம், திருப்பூர் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பெரும் குடிநீர் திட்டத்திற்கான குடிநீர் பில்லுர் நீர் தேக்கத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

மின் உற்பத்தி
நீலகிரி மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் மழைநீர் முழுமையாகவும், நீர் தேக்கங்களில் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அப்பர் பவானியிலிருந்து துவங்கும் நீர் குந்தா வரையிலும் அடுத்தடுத்து பயணித்து 6 நீர் மின் உற்பத்தி நிலையங்களில் சுமார் 585 மொகா வாட் மின் உற்பத்திகு பயன்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து நீர் பரளி வழியாக பில்லுர் அணைக்கட்டுக்கு வந்து சேருகிறது. அங்கும் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் பைகாராவிலும் நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் மாயர் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்கிறது. அதனைத் தொடர்ந்து கர்நாடாகாவின் ஒரு பகுதியில் ஓடி மீண்டும் தமிழக பகுதியில் நுழைந்து, இறுதியாக பவானிசாகர் அணைக்கட்டில் சங்கமிக்கிறது. இவ்வாறு நீலகிரி மலையில் உற்பத்தியாகும் முழு மழை நீரும் குடிநீர், விவசாயம், மின் உற்பத்தி என முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

சிலப்பதிகார மணிமேகலையின் அட்சய பாத்திரத்தில் இருது அள்ள, அள்ள குறையாமல் அன்னம் வந்ததாக இலக்கியத்தில் படித்ததுண்டு. காமதேணு பசு சுரக்க, சுரக்க பால் வழங்கியதாக செவி வழி செய்தி உண்டு.ஆனால், இயற்கை அன்னை மனிதனுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி உயிரளித்து வரும் நீலகிரி மலையின் இயற்கையின் கொடையினை அமுதசுரபி எனலாம்.

– எஸ்.ஏ.மாணிக்கம்.

Leave a Reply

You must be logged in to post a comment.