திருப்பூர்,
திருப்பூர் பார்க் ரோட்டில் சுரங்கப் பாலம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தால், 6 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக உள்ளது.

திருப்பூர் குமரன் ரோடு, காமராஜர் ரோடு மற்றும் யூனியன் மில் ரோட்டில் இருந்து பார்க் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை அருகே சந்திக்கின்றன. அதிக வாகன போக்குவரத்து இருப்பதால், நான்கு ரோடு சந்திப்பில் உள்ள சிக்னல் இருபுறமும், வாகனங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது. மேலும் காலை, மாலை நெரிசல் நேரங்களில் சிக்னலின்போது, குமரன் ரோட்டில் ஒரு கி.மீ., தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.இதையடுத்து, போக்குவரத்து நெரிசல், காலவிரையம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ரூ. 9 கோடி ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே, பார்க் ரோட்டில் இருந்து யுனிவர்சல் ரோடு வரை, நொய்யல் ஆற்றங்கரையில் சுரங்கப் பாலம் அமைப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் அமையும்போது, குமரன் ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம், பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் எந்த தடையுமின்றி எளிதாகச் செல்ல முடியும்.

மேலும், யூனியன் மில் ரோட்டில் இருந்து அவிநாசி ரோடு, பி.என்., ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சுரங்கப் பாலம் வழியாக, தடையின்றி செல்ல முடியும். இந்தப் பாலத்துக்காக வெள்ளி விழா பூங்கா பகுதியில் கான்கிரீட் சுரங்கபாலம் பணி துவங்கியது. மேலும்,வாகனங்கள் செல்லுவதற்கு பூங்கா பகுதியில், 12 மீட்டர் நீளம் நிலத்தை நெடுஞ்சாலைத் துறையிடம் மாநகராட்சி ஒப்படைத்தது. இதில், ஒரு பகுதியில் சுரங்கப் பாலம் பணி முடிந்து 5 ஆண்டாகியும், யுனிவர்சல் ரோடு பகுதியில் பணிகளை துவங்கவில்லை. மேலும், நிலத்தை கையகப்படுத்தி நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைப்பதில் வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

இதனால், சுரங்கப் பாலத்தின் ஒரு பகுதி பணி பாதியில் நிற்கிறது. மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சுரங்கப் பாலம் பணி பாதியில் முடங்கி உள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது. எனவே, சுரங்கப் பாலத்தின் எஞ்சியுள்ள பணிகளை உடனடியாக துவங்கி, வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.