தாராபுரம்,
தாராபுரத்தில் சில நாட்களாக மணல் திருட்டு நடைபெறாமல் இருந்த நிலையில், மீண்டும் மணல் திருட்டு ஆரம்பித்துள்ளது. திருட்டை தடுக்கவேண்டிய அதிகாரிகள், துணை போவதால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா? என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தாராபுரம் பகுதியில் கட்டுமான பணிக்கு போதிய அளவு மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கரூர் மற்றும் திருச்சியில் இருந்து அரசு அனுமதியுடன் ஆன்லைனில் பதிவு செய்து பர்மிட்டுடன் கொண்டு வரப்படு கிறது. 3 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூ. 20 ஆயிரம் முதல்ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஆனால் தேவைகேற்ப மணல் உரிய நேரத்தில் கிடைக்காததால், கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாராபுரம் அமராவதி ஆற்றில் கடந்த 5 மாதங்களாக மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்தனர். சங்ரண்டாம்பாளையம், கவுண்டையன்வலசு, கரையூர், அலங்கியம் அமராவதி ஆற்றுபாலம், கொங்கூர் மற்றும் கரூர் மாவட்டம் திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியான ஒத்தமாந்துறை வரை சுமார் 20 இடங்களில் தினந்தோறும் சுமார் 50 லோடு வரை இரவு நேரத்தில் மணல் திருட்டுதனமாக எடுக்கப்படுகிறது.

இந்த மணல் லோடு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த மணல் திருட்டால் அமராவதி ஆறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும், மணல் கொள்ளையை தடுக்கக் கோரி பொதுமக்கள் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 15 நாட்களாக மணல் திருட்டு நடைபெறமால் இருந்தது. இந்நிலையில், புதனன்று இரவு கவுண்டையன்வலசு அமராவதி ஆற்றுப்படுகையில் கிராவல் மண்ணை கொட்டி வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக பாதை அமைத்து, மீண்டும் மணல் திருட்டு ஆரம்பமாகியுள்ளது. அதே போல் ஏரணமேடு பகுதியில் பாதை அமைக்கும் வேலையை மணற்கொள்ளையர்கள் செய்து வருகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர் ரஞ்சித்குமார் என்பவர் வருவாய்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள், சம்பந்தபட்ட மணல்கொள்ளையர்களிடமே தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மணல் கொள்ளையர்கள் ரஞ்சித்குமாரை எச்சரித்துள்ளனர். மேலும், அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கையால், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நடைமுறைக்கு வருமா? என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மடத்துக்குளம்:
இதேபோல், மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது அமராவதி ஆறு. இந்த ஆற்றங்கரையோர கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் அமராவதி ஆற்றின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக உள்ளது. இந்த நிலையில், அமராவதி ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான மணல் திட்டுகள் காணப்படுகிறது. இவ்வாறு குவியல், குவியல்களாக குவிந்திருக்கும் மணல், சமூக விரோதிகளின் பார்வை பட்டு பாழாகி கொண்டிருக்கிறது.மடத்துக்குளத்தை அடுத்த கடத்தூர், குமரலிங்கம் போன்ற பல பகுதிகளில் மணல் திருட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளின் செயல்பாடு போதிய அளவில் இல்லாததால் மண்வளம் சுரண்டப்படுகிறது.

மேலும், மடத்துகுளம் சுற்றுவட்டார பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், இரவு நேரங்களில் ஆற்றுக்குள் இறங்கி, மணலை சாக்கு மூடைகளில் கட்டி, இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், மினி லாரிகள் போன்றவற்றில் கடத்தி சென்று வருகிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமே நடந்து வந்த இந்த திருட்டு, தற்போது பட்டப்பகலில் துணிகரமாக நடந்து வருகிறது. காவல்துறையினர், அரசு அதிகாரிகளோ மணல் கடத்தலை கண்டுபிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தால், அபராதம் கட்டிவிட்டு மணலுடன் வாகனங்களை எடுத்து சென்றுவிடுகிறார்கள். மணல் திருடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. எனவே, மணல் திருட்டை தடுக்க மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.