திருப்பூர்,
திருப்பூரில் மின்பழுது புகார் தெரிவித்தால் மின் வாரிய அலுவலர் தரக்குறைவாக பேசுவதாகவும், மின் பழுதை நீக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் பொது மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருப்பூர் சக்திநகர் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் வியாழனன்று புகார் அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் பி.பா.புதூர் கிளைச் செயலாளர் பொன்னுசாமி தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.என்.நடராஜ், ஸ்ரீநகர் ஏ கிளைச் செயலாளர் பாண்டியன் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் இருபது பேர் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு உதவி பொறியாளரைச் சந்தித்து இது குறித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஆர்.கே.நகர், கேத்தம்பாளையம், குமாரசாமி நகர், முனியப்பன் காலனி, சுப்பையா தெரு, ஆர்.கே.நகர் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டால் அதைப் பற்றி மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தாலும் சரி செய்வதில்லை, சம்பந்தப்பட்ட பகுதி மின் கம்பி ஊழியரை (லைன்மேன்) தொடர்பு கொண்டாலும் அவர் மிகவும் மோசமாகப் பேசுகிறார்.

இதனால் பொது மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதுடன், மின் பழுதும் நீக்கப்படாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, மின் பழுது புகார்கள் தெரிவித்தால் அதை உடனடியாக சரி செய்யவும், பொதுமக்களுக்கு முறையாக பதில் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். குறிப்பாக, பெண்களிடம் தரக்குறைவாக பேசும் மின் பாதை ஆய்வாளர் (எல்.ஐ) முருகசாமி மீது நடவடிக்கை எடுக்கவும் பொது மக்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய உதவிப் பொறியாளர் உறுதியளித்தார்.

Leave A Reply