திருப்பூர்,
பனியன் தொழிற்சாலைகளுக்கு இடையே சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்களை காலை, மாலை போக்குவரத்து நெருக்கடி மிக்க நேரங்களில் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவது உற்பத்தியை பாதிக்கும் என்பதால் அதற்குத் தடை விதிக்கக் கூடாது என்று தொழில் துறையினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார், சாயஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் நாகராஜ், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் என்.விவேகானந்தன், அகில் மணி, காம்பேக்டர்ஸ் சங்கச் செயலாளர் வி.ஈஸ்வரமூர்த்தி, ரைசிங் அசோசியேசன் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் 16ஆம் தேதி புதனன்று திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் கயல்விழியை சந்தித்து இது குறித்து கோரிக்கை வைத்தனர். சரக்குகளை குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய நிலையில், ஒரே தொழிற்சாலையில் மட்டும் பின்னலாடை உற்பத்தி நடைபெறுவதில்லை. நான்கைந்து இடங்களுக்கு வெவ்வேறு கட்டப் பணிகளுக்காக சரக்குகளை வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் சரக்கு வாகனங்களை காலை 8 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரையும் நகர எல்லைக்குள் தடை விதிப்பது பின்னலாடைத் தொழிலை ஒட்டுமொத்தமாக கடுமையாக பாதிக்கும். எனவே பின்னலாடை சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அந்த நேரங்களிலும் அனுமதி வழங்க வேண்டும். எனினும் கனரக சரக்கு வாகனங்களுக்கு நகர எல்லைக்குள் மேல்குறிப்பிட்ட முக்கிய நெருக்கடி நேரங்களில் தடை விதிப்பதை ஏற்றுக் கொள்வதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர். இதை பரிசீலிப்பதாக மாநகர காவல் துணை ஆணையர் கயல்விழி கூறியதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply