பள்ளிப்பாளையம்,
4 ஆண்டுகளாக தரப்படாத நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி பொன்னி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், பரமத்திவேலூர், கொக்கராயன்கராயன் பேட்டை முதலிய பகுதிகளில் கரும்பு பிரதானமாக பயிரிடப்பட்டு வருகிறது. இவை பள்ளிப்பாளையம் பகுதியில் இயங்கும் பொன்னி சர்க்கரை ஆலைக்கும், மோகனூர் பகுதியிலுள்ள மோகனூர் சர்க்கரை ஆலைக்கும் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவை தொகையினை தராமல் ஆலை நிர்வாகங்கள் இழுத்தடித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அரசு தரப்பிலும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதும், ஆலை நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு வழங்காததால் பேச்சு வார்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிடக்கோரி தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் தலைமையில் வியாழனன்று பள்ளிப்பாளையம் பகுதியிலுள்ள பொன்னி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செ.நல்லாகவுண்டர், மாவட்ட பொருளாளர் இ.முத்துசாமி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பூபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த போராட்டத்தில் திரளான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.