திருப்பூர்,
திருப்பூர் ஊராட்சிகளில் போதிய நிதி இல்லாததால் குடிநீர் குழாய், தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேலாக அனைத்து வகையான உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் பொறுப்பில் உள்ளது. இந்நிலையில், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் நடைபெறமல் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் குடிநீர் வினியோகம், குப்பை சேகரித்தல், தெருவிளக்கு பராமரிப்பு ஆகிய மூன்று பணிகளும் அவசிய பணியாக உள்ளது. இந்நிலையில்,உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர்கள் இருக்கும் போது, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் கூடுதல் கவனம் செலுத்தி, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்வது போன்ற பணிகள் உடனுக்குடன் நடந்தது.

தற்போது, அதிகாரிகள் பொறுப்பு வகிப்பதால், ஊராட்சி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்,` வழக்கமாக, வாரம் ஒருமுறை குடிநீர் கிடைக்கும். அதிகாரிகள் பொறுப்பேற்ற பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. தெருவிளக்குகள் பழுதாகி, இருள் சூழ்ந்துள்ளது. ஊராட்சியில் கூறினால், மின்வாரிய ஊழியர்களிடம் கூற வேண்டும் என்கின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் கூறினால், ஊராட்சியில் இருந்து பொருட்கள் வாங்கி கொடுத்தால் மட்டுமே, பணிகளை செய்ய முடியும் என்கின்றனர். இருதரப்பினர் ஒருங்கிணைப்பு இல்லாததாலும், தனிஅலுவலர் கண்டுகொள்ளாமல் இருப்பதாலும் குடிநீர் வினியோகம், குப்பை அள்ளுவது, தெருவிளக்கு, ரோடு ஆகிய பணிகள் எதுவும் நடப்பதில்லை. உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி முறைப்படுத்த வேண்டும்’ என மக்கள் எதிர்பார்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.