மும்பை:
பஞ்சாப் நேசனல் வங்கியை மோசடி செய்து, பல ஆயிரம் கோடி ரூபாயை சூறையாடிய நீரவ் மோடியும், அவரது மாமா மெகுல் சோக்ஸியும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, நாட்டின் 2-ஆவது பெரிய பொதுத்துறை வங்கியான, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 13 ஆயிரத்து 700 கோடி கடன் வாங்கி விட்டு, தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பினார். நீரவ் மோடியின் மோசடியில் தொடர்புடைய அவரது மாமா மெகுல் சோக்ஸியும் வெளிநாடு பறந்தார்.தற்போது நீரவ் மோடி உள்ளிட்டோர் மீது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புக்கள் ஏராளமான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில், நீரவ் மோடியின் மோசடிகள் தொடர்பாக சிபிஐ கடந்த மே 14-ஆம் தேதி தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து, நீரவ் மோடியைத் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இதனிடையே புதன்கிழமையன்று தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையையும் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், நீரவ் மோடியின் நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்த மெகுல் சோக்ஸி மீதான குற்றங்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. இதையடுத்து, அவரையும் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.