அமராவதி:
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தை, மத்திய அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாக தெலுங்கு தேசம் கட்சி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் நாட்டிலேயே அதிக சொத்து கொண்டதாகவும், வருவாய் அதிகம் கொண்டதாகவும் இருந்து வருகிறது. கோயிலின் நிர்வாகத்தை, ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய தொல்லியியல் துறை அண்மையில் எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆந்திராவில் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய கடிதத்தை தொல்லியியல் துறை திரும்பப் பெற்றது.
இதனிடையே, திருப்பதி கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களில் 65 நிரம்பியவர்களுக்கு கட்டாய ஓய்வு என தேவஸ்தானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட அறக்கட்டளை வாரியம் முடிவு எடுத்தது. ஆனால், அதற்கு கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமனா தீட்சிதலு எதிர்ப்பு தெரிவித்தார்.அறக்கட்டளை வாரியத்தை மிரட்டும் வகையில், கோவில் நிர்வாகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் முறைகேடு நடைபெறுவதாக திடீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.

இந்நிலையிலேயே, தலைமை அர்ச்சகருக்கு பின்னணியில் பாஜக உள்ளதாகவும், தொல்லியியல் துறையின் வாயிலாக திருப்பதி கோயிலை கையகப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் தெலுங்குதேசம் குற்றம் சாட்டியுள்ளது.

தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச பிராமின் பரிஷத்தின் சேர்மனுமான வெமுரி ஆனந்த சூர்யா பேசுகையில், “தீட்சிதலுவின் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் தில்லியில் வலுவாக இருக்கும் படைகள் உள்ளன” என்று கூறியுள்ளார். இவ்வளவு காலமாக அமைதியாக இருந்த தீட்சிதலு, இப்போது திடீரென்று குற்றம் சாட்டுவது ஏன்? எனவும், “ தீட்சிதலு ஏன் சென்னை சென்று பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேச வேண்டும்? புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னர் தேவஸ்தானத்திற்கு எதிராக பேசுவதின் பின்னணி நோக்கம் என்ன? தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பின்னர்தான் அவர் முறைகேடுகளை பார்த்தாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.