பெங்களூரு,

கர்நாடகாவில் எந்தக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 இடங்களைப் வெற்றி பெற்ற பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது. அதேசமயம், 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. இந்த கூட்டணியும், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தனர்.
இந்நிலையில் ஆளுநர் வாஜுபாய் வியாழக்கிழமை முதல்வராக பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு நேற்று இரவு அழைப்புவிடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இது அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதிகாலை 2 மணி முதல் காலை 5 மணி வரை 3 மணி நேரம் வரை விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவை நிறுத்தி வைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம், எடியூரப்பா ஆளுநரிடம் அளித்துள்ள எம்எல்ஏக்கள் கடிதத்தின் நகலை அளிக்கவும் பாஜக வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கர்நாடக ஆளுநர் மாளிகையில், இன்று காலை 9 மணிக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே எடியூரப்பா 23-வது முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் வாஜுபாய் வாலா அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply