====சோழ. நாகராஜன்=====                                                                                                                                                              பிரபல தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ் 1950 ஆண்டு பொங்கலுக்கு வெளியிட்ட தமிழ்த் திரைப்படம் பொன்முடி. அந்நாளைய முன்னணி இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் நாயகன் நரசிம்ம பாரதி. புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் காப்பியமான எதிர்பாராத முத்தம்தான் துன்பியல் வகைமைக் காதல் கதையமைப்பைக் கொண்ட இந்தப் பொன்முடிக்கு மூலம். எதிர்பாராத முத்தம் எனும் பெயருக்கு பதிலாக கதையின் நாயகனான பொன்முடியின் பெயரையே படத்திற்கும் சூட்டினார்கள்.

அப்போது பாவேந்தர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கதை – வசன எழுத்தாளராக இருந்தார். வளைந்துகொடுக்காத அந்நிறுவனத்தின் அதிபர் டி.ஆர். சுந்தரத்திடம் அவரைப்போன்றே பிடிவாத குணமுடைய பாவேந்தர் சில வருடங்களாக நீடித்ததையே வியப்பான ஒன்றாக அப்போது சொன்னார்கள். தகுதியானவர்களிடம் சுந்தரம் சற்றே இணக்கமாகப் போகக்கூடியவர் என்றும் சொல்லிக்கொண்டார்கள். அப்படித்தான் அதற்குச் சற்று முன்னர் அந்நாளைய நாயக நடிகர் பி.யூ. சின்னப்பாவுக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டு சின்னாப்பா அங்கிருந்த வெளியேறியிருந்தார். பலரும் அவர் வெளியேற்றப்பட்டார் என்றே பேசினார்கள்.

பாவேந்தரின் எதிர்பாராத முத்தத்தின் இறுதிப் பகுதியை சினிமாவுக்காக மாற்றிக்கொண்டார்கள். ஆனாலும், அதன் முடிவு ஒரு சோகச் சுமைதான் என்பதைத் தனது வசனத்தின் மூலம் காட்டியிருந்தார் பாவேந்தார். “எங்கள் சோகத் தொடர்கதையின் இன்ப முடிவுரை தங்கள் வருகையால் இன்னும் சுவையேறிவிட்டது” என்று நாயகி பூங்கொடி கூறுவதாக எழுதியிருந்தார் அவர். அது ஒரு சோகத் தொடர்கதையாம்.

படத்திற்கு இசையமைத்தது தமிழ் சினிமாவின் சங்கீதச் சக்கரவர்த்தி என அந்நாளிலேயே புகழப்பட்ட இசைமேதை ஜி. ராமநாதன். இந்தப் படத்தின் நாயகனுக்காக எல்லாப் பாடல்களையும் ஜி. ராமநாதனே பாடியிருந்தார். இது அப்போது பெருத்த கவனம் பெற்றது. இன்றளவும்கூட ஒரு இசையமைப்பாளர் கதாநாயகனுக்காக முழுக்க முழுக்கப் பின்னணிக் குரல் கொடுத்துப் பாடிய இன்னொரு படத்தைச் சொல்வது அரிது. இசையமைப்பாளர் ஒன்றிரண்டு பாடல்களுக்குப் பின்னணிக் குரல் தந்து பாடுவதுதான் எப்போதுமே வழமையாக இருந்தவருவது. அந்த வழமையை ராமநாதன் மாற்றிக் காட்டியிருந்தார் இந்தப் படத்தில்.

பாடல்களுக்கு பல நாட்கள் ஒத்திகை பார்ப்பார்கள் அந்த நாளில். அதற்கென்றே மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்தில் ஒரு குளுகுளு பந்தல் இருந்ததாம். அங்கே பின்னணிப் பாடகி ரத்தினத்திற்கு பாடல் மெட்டுக்களைச் சொல்லிக் கொடுக்கிறபோது தானும் உடன் பாடியதே ஜி. ராமநாதனுக்கு இப்படியொரு துணிவையும், புது யோசனையையும் தந்திருக்க வேண்டும். அதனை பட அதிபர் சுந்தரமும் விரும்பியிருக்க வேண்டும். இப்படித்தான் அந்தப் புதுமை – நாயகனுக்காக எல்லாப் பாடல்களுக்கும் இசையமைப்பாளரே குரல் தரும் புதுமை நிகழ்ந்திருக்க வேண்டும்.

எல்லிஸ் ஆர். டங்கனும் இந்திய இசையின்மீது – குறிப்பாகத் தென்னக இசையின்மீது அளவற்ற காதல் கொண்டவராக இருந்தார். பாடல் காட்சிகளாகட்டும், கதையின் சூழலுக்கு ஏற்ப பின்னணி இசையையும், காமிராவையும் கையாளும் விதமாகட்டும் டங்கனுக்கு நிகர் அந்நாளில் வேறெவரும் இல்லை. அதனால்தான் அவரால் எம். எஸ். சுப்புலட்சுமி எனும் தேமதுரக் குரலரசியின் கான அருவி பொங்கும் மீரா போன்ற படங்களைத் தர முடிந்தது. தனக்கு இயல்பாகப் பொருந்திப்போகும் காமிரா நிபுணர் ஜே.ஜி. விஜயமைப் பயன்படுத்திக்கொண்டார். பொன்முடியில் விஜயம் காட்டிய காமிராக் கலைநுட்பத்திற்காக அவருக்கு அயல்நாட்டில் பாராட்டும் விருதும்கூடக் கிடைத்தது.

“தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞர் எழுதிய காவியத்தை அமெரிக்க மேதை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்குகிறார்!” – என்று வெகு விமரிசையாக விளம்பரப் படுதிதினார்கள் பொன்முடி படத் தயாரிப்பு நிறுவனத்தினர். இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் ஒரு லைலா – மஜ்னுவாக உருவாகி, எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாக இருந்தது. பொன்முடி – பூங்கொடி காதல் காவியமான இந்தப் படத்தின் பாத்திரங்ளோடேயே ஒன்றிப்போனார்கள் நரசிம்ம பாரதியும் மாதுரியும். படத்தில் பாவேந்தரின் உணர்ச்சிகர வசனச் சுவையமுதும், ராமநாதனின் தனித்துவ இசையமுதும் படம் பார்ப்போர்க்குப் பெருவிருந்தளித்தன.

“கண்ணில் ஒத்திக் கொள்ளக்கூடிய பொருத்தமான ஒளிப்பதிவு, நம்பகமான நடிப்பு, அருமையான இசை, உணர்ச்சிமயமான பின்னணிப் பாட்டு, தமிழர் பெருமை, வைதீக எதிர்ப்பு ஆகியவற்றுக்கு இடையே அளவான வசனங்கள்… இவை பொன்முடியை உயர்த்தும் விஷயங்கள். இயக்குநர் டங்கனின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்” – என்று எழுதினார் பொன்முடி திரைப்படம் பற்றி பழம்பெரும் திரைவிமரிசகர் வாமணன்.
பாவேந்தரின் அற்புதமான ‘எதிர்பாராத முத்தம்’ காப்பியத்தை ஒரு உன்னதத் திரைக் காவியமாக்கிய எல்லிஸ் ஆர். டங்கன் எனும் மேதமைக் கலைஞர் முழுமையாக இயக்கிய கடைசி தமிழ்ப் படமும் இந்தப் பொன்முடிதான் என்பதும் குறிக்கத் தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.