புதுதில்லி:
கர்நாடகத்தில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தன் மூலம் அரங்கேற்றப்பட்டுள்ள ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடு தழுவிய மிகப் பிரம்மாண்டமான இயக்கத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. கர்நாடகாவில் ஜனநாயக நடைமுறைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் வெடிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எச்சரித்தார். கர்நாடக நிகழ்வுகளைத் தொடர்ந்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், இடதுசாரிகள், இதர பல்வேறு மாநிலக் கட்சிகள் தொடர்ந்து ஒருவரையொருவர் பேசி வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஓரிரு நாட்களில் பெங்களூரிலோ அல்லது தில்லியிலோ நடைபெற வாய்ப்பிருக்கிறது என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க புதனன்று இரவு ஆளுநர் அழைத்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூசன் ஆகியோர், பதவியேற்க தடைவிதிக்க மறுத்த நிலையில், அவசர அவசரமாக வியாழனன்று எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, எடியூரப்பா ஆளுநரிடம் அளித்த தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தில்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “நீதிமன்றம் இறுதியாக என்ன தீர்ப்பளிக்கிறது என்பதைப் பொருத்து எதிர்க்கட்சிகள் கூட்டாக திட்டமிடுவோம். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதிகள் அப்பட்டமாக மீறப்படுமானால், நாடாளுமன்ற ஜனநாயக விதிகள் சீர்குலைக்கப்படுமானால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது ஒரு மிகப்பெரிய தேசிய பிரச்சனையாக மாறும்; அதை நாடு முழுவதும் பெரும் இயக்கமாக எடுத்துச் செல்வதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதியோடு இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

கர்நாடகத்தில் முற்றிலும் தவறான முறையில் ஆட்சி அமைப்பதற்கு பாஜக அழைக்கப்பட்ட விதம் குறித்து எதிர்ப்பும் கண்டனம் தெரிவிக்கக்கூடிய ஒவ்வொரு மதச்சார்பற்ற ஜனநாயக எதிர்க்கட்சியையும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்றும் பாஜகவிற்கு போதுமான அளவில் எண்ணிக்கை இல்லை என்று மிகத்தெளிவாக தெரிந்த பின்னரும் கூட ஆளுநர் எப்படி 15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறார் என்ற கேள்வி பெரிதாக எழுந்திருக்கிறது என்றும் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா போன்ற கட்சிகளே கூட இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சி வட்டார தலைவர்கள் கூறியதாக பிடிஐ தெரிவித்திருக்கிறது.

மொத்தத்தில் கர்நாடகத்தில் ஜனநாயகப் படுகொலை அரங்கேறியிருக்கிறது; அரசியலமைப்புச் சட்டம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது என்று கடுமையான முறையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்திருப்பதாக பிடிஐ கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.