சேலம்,
சேலம் உருக்காலையில் உற்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கிட வலியுறுத்தி சேலம் உருக்காலை பாதுகாப்பு குழுவினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை நிறுவனான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. நவரத்னா அந்தஸ்தில் உள்ள இந்த நிறுவனத்தை பாதுகாக்கக்கோரி சேலம் உருக்காலை தொழிலாளர்கள் மற்றும் உருக்காலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  ஆனால் மத்திய அரசு மக்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து உருக்காலையை விற்க முயற்சித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தற்போது 65 சதவிகித இயந்திர பணிகளை முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை ஆண்டு முழுவதும் தடையின்றி வழங்க வேண்டும். உருக்காலைக்கு தேவையான நிதி மற்றும் செயல் மூலதனத்தை தடையின்றி வழங்க வேண்டும் எனக்கோரி சேலம் உருக்காலை பாதுகாப்பு குழுவினர் வியாழனன்று உருக்காலை வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன், மாவட்டத் தலைவர் பி.பன்னீர் செல்வம், சேலம் உருக்காலை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் வடமலை, தேவராஜ், ஏடிபி முருகேசன், எஸ்சி,எஸ்டி சங்க செயலாளர் மாணிக்கம், பிடிஎஸ் சங்க நிர்வாகி வெங்கடேஷ், நிலம் கொடுத்தோர் சங்க நிர்வாகி நாகராஜ் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: