கோவை,
கோவை, வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் புதனன்று நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த வருவாய் தீர்வாயம் வரும் மே 31 ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் கூறுகையில், ஒவ்வொரு பசலி ஆண்டும் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயம் நடைபெறும். இத்தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டத்திலுள்ள கிராம கணக்குகள் அனைத்தும் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் சரிபார்க்கப்பட்டும். மேலும் பொதுமக்கள் தங்களது குறைகளையும், சான்றிதழ்களையும், வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனுவாக அளிக்கலாம். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே தீர்வு காணப்படும். மற்ற மனுக்கள் தொடர் நடவடிக்கைகளின் பொருட்டு பரிசீலனை செய்து தீர்வு காணப்படும். இதன்படி கோவை மாவட்டத்தில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் மே 31 ஆம் தேதி வரையும், கிணத்துக்கடவு வட்டத்தில் மே 22 ஆம் தேதி வரையும், அன்னூரில் மே 23 ஆம் தேதிவரையும், பேரூரில் மே 29 ஆம் தேதி வரையும், கோவை தெற்கில் மே 17ஆம் தேதி வரையும், மேட்டுப்பாளையத்தில் மே 23 ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இதில் மாவட்டத்தின் அனைத்து உள்வட்டங்களில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தத்தம் பகுதியைச் சார்ந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அயன் பட்டா மாறுதல், நிலச் சீர்திருத்த நிலங்கள் தொடர்பான பட்டா மாறுதல்கள், வாரிசுச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று உள்ளிட்ட இதர சான்றுகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகைகள், குடும்ப அட்டை போன்ற கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.