புதுதில்லி:
இந்தியாவின் அனைத்துத் தொலைத் தொடர்பு வட்டாரங்களிலும் நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் சேவைக்கான மொபைல் கட்டண விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது.
இந்திய நெட்வொர்க் சந்தையில் நிலவும் போட்டியை கட்டுக்குள் வைத்திருக்கவும் வாடிக்கையாளர் சேவை சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மொபைல் கட்டண நடைமுறையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் டிராய் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்
கட்டமாக இந்தியாவில் நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் சேவைக்கான கட்டண விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளம் ஒன்றை சென்ற மாதம் டிராய் செயல்படுத்தியது. இந்தத் தளத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் கூடுதல் தகவல்கள் இருக்க வேண்டும் என்பதில் டிராய் உறுதியாக உள்ளது.

எனவே, இந்திய நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளுக்கான முழுக் கட்டண விவரங்களையும் வட்டாரம் வாரியாக வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சேவைக் கட்டண விவரங்களை நெட்வொர்க் நிறுவனங்களிடம் டிராய் கோரியுள்ளது.
முன்னதாக தில்லி வட்டாரத்துக்கான முழு விவரங்களும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக குஜராத் வட்டாரமும் அதில் சேர்க்கப்பட்டது. இப்பட்டியல் துரித கதியில் விரிவாக்கம் செய்யப்படும் என டிராய் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: