ஈரோடு,
2017 – 2018 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் புதனன்று வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் இராண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு கல்வி மாவட்டம் மற்றும் கோபி கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்களாக உள்ளது. இதில் ஈரோடு கல்வி மாவட்டத்தில், 36 அரசுப்பள்ளிகளும், 3 நகரவைப் பள்ளிகளும், 8 நிதி உதவி பள்ளிகளும், 6 சுயநிதி பள்ளிகளும், 49 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள 102 பள்ளிகளில், 5 ஆயிரத்து 449 ஆண்களும், 6 ஆயிரத்து 52 பெண்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 501 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில், 5 ஆயிரத்து 301 ஆண்களும், 5 ஆயிரத்து 937 பெண்கள் என 11 ஆயிரத்து 238 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி 97.71 சதவிகிதமாகும்.

கோபி கல்வி மாவட்டத்தில், 54 அரசு பள்ளிகளும், 2 நலத்துறை பள்ளிகளும், 3 நகரவைப் பள்ளிகளும், 4 நிதி உதவி பள்ளிகளும், 18 சுயநிதி பள்ளிகளும், 26 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 107 பள்ளிகளில், 6 ஆயிரத்து 539 ஆண்களும், 7 ஆயிரத்து 69 பெண்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 608 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில், 6 ஆயிரத்து 106 ஆண்களும், 6 ஆயிரத்து 752 பெண்கள் என 12 ஆயிரத்து 858 மாணவ மாணவியர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி 94.49 சதவிகிதமாகும்.இரு கல்வி மாவட்டங்களில் சராசரியாக 96.35 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இரு கல்வி மாவட்டங்களிலும் 25 ஆயிரத்து 9 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில், 24 ஆயிரத்து 96 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 96.69 சதவிகிதம் பெற்றிருந்த நிலையில் தற்போது 96.35 பெற்று சற்று குறைந்துள்ளது.

நுண்உயிரியல் பாடத்தில் மாணவ, மாணவிகள் 31 பேரும், புவியியல் பாடத்தில் மாணவிகள் 62 பேரும், உயிர் வேதியியல் பாடத்தில் மாணவ, மாணவிகள் 27 பேரும், செவிலியர் பாடத்தில் மாணவ, மாணவிகள் 107 பேரும், அரசியல் அறிவியல் பாடத்தில் மாணவ, மாணவிகள் 28 பேரும், வீட்டு அறிவியல் பாடத்தில் மாணவ, மாணவிகள் 63 பேரும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.