கோயம்புத்தூர்:
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 16 புதனன்று வெளியிடப்பட்டன. தேர்வில் தேர்ச்சி பெறாததால் கோவையைச் சேர்ந்த இரு மாணவிகளும் தூத்துக்குடி
மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவரது மகள் பிரியா (19) தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் மாடியிலிருந்து கீழே குதித்தார். அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து,
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை சிங்காநல்லுரைச் சேர்ந்த வசந்த்பாபு என்பவரின் மகள் ஏஞ்சலின் ஜெனிபர். தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனவேதனையடைந்த மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பொன் பலவேசம் என்பவரின் மகள் முத்துலட்சுமி (16). இரண்டு பாடத்தில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த முத்துலெட்சுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்போது,மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சிபிஎஸ்இ ஆசிரியர்களைக் கொண்டு பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. அவர்கள் மிகக் கடினமான முறையில் விடைத்தாளை திருத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: