கோவை;
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதனன்று வெளியிடப்பட்டன. இதில் கோவை மாவட்டத்தில் 95.48 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டு 10 வது இடத்தில் இருந்த நிலையில் இந்தாண்டு 8 ம் இடத்தை கோவை மாவட்டம் பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 347 பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது.36,454 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 34,805 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இத்தேர்வில் 15,066 ஆண்கள், 19,739 பெண்கள் தேர்ச்சியடைந்தனர். ஆண்கள் 93.62 சதவிகிதமும், பெண்கள் 96.95 சதவிகிதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகளே இம்முறையும் அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் பெண்கள் தேர்ச்சி கடந்த ஆண்டு 95.83 சதவிகிதமாகும். இந்தாண்டு 95.48 சதவிகிதமாக கடந்தாண்டினை காட்டிலும் 0.35 சதவிகிதம் குறைந்துள்ளது. மாற்றுதிறனாளி மாணவர்கள் இத்தேர்வில் 93.3 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர். பார்வையற்ற மாணவர்கள் 13 பேர் தேர்வு எழுதி அனைவரும் தேர்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் கூறுகையில், 1180 மதிப்பெண்களுக்கு மேல் 34 மாணவர்களும், 1151-1180 மதிப்பெண் 611 மாணவர்களும், 1126-1150 மதிபெண் 814 மாணவர்களும், 1101 – 1125 மதிப்பெண் 1018 மாணவர்களு, 1001-1100 மதிப்பெண் 5332 மாணவர்களும் பெற்றுள்ளனர். 7500 மாணவர்கள் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் வாங்கியுள்ளனர், என்றார்.

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு இந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 8 மாணவர்களில் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் திருப்பூரை சேர்ந்த தரணிதரன் என்ற மாணவர் 1093 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 7 ம் வகுப்பு படிக்கும் போது குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் கைவிட்டு தரணிதரன் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு படிப்பின் முக்கியத்துவம் குறித்த அதிகாரிகளின் எடுத்துரைத்தலால் படிப்பை மீண்டும் தொடர்ந்தார்.

அதன்பின்னர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 454 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆயிரத்து 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவராக வேண்டுமென்பது தனது கனவு எனவும், மருத்துவ படிப்பை தொடர அரசு உதவ வேண்டுமெனவும் தரணிதரன் தெரிவித்தார்.குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த மாணவி கஸ்தூரி 820 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் கைவிட்டு பனியன் கம்பெனிக்கு சென்றதாகவும், பெண் கல்வி குறித்து விளக்கி மீண்டும் படிக்க தூண்டியதால் படிப்பை மீண்டும் தொடர்ந்ததாக கஸ்தூரி தெரிவித்தார். மேலும் படித்து முன்னேற வேண்டுமென்ற ஆசை இருப்பதாகவும், அதற்கு அரசு உதவ வேண்டுமென தெரிவித்தார்.

சிறை கைதிகள்:
கோவை மத்திய சிறையில் 14 ஆயுள் தண்டனை கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் 11 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் திருப்புரை சேர்ந்த தமிழழகன் 1050, ஈரோட்டை சேர்ந்த யுவபிரகாஷ் 995, கோவையை சேர்ந்த நவாப்கான் 878 மதிப்பெண்கள் என அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறையில் தேர்வெழுதி வெற்றிபெற்ற அனைவரும் பட்டப்படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக பாரதியார் பல்கலை கழகத்தில் தொலைதூர கல்வியில் சேர்வதற்கு சிறைநிர்வாகம் ஏற்பாடு செய்வதாக அறிவித்துள்ளது.

தற்கொலை முயற்சி

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இரு மாணவிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ஜெயலட்சுமியின் மகள் பிரியா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த பிரியா, காவலர் குடியிருப்பில், தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து மொட்டை மாடிக்கு சென்றவர் மேலே இருந்து கீழே குதித்துள்ளார். இதனைக்கண்ட பிரியாவின் தாயார் காப்பாற்றியதையடுத்து பிரியாவிற்கு கை முறிவு ஏற்பட்டது. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் பிரியாவை காப்பாற்றிய அவரது தாயாருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இதே போல சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் பாபுவின் மகள் ஏஞ்சலின் ஜெனிபர் (18) தனியார் பயிற்சி மையத்தின் மூலம் பன்னிரெண்டாம் ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவில் தோல்வியடைந்ததை அடுத்து வீட்டில் இருந்த பெனாயிலை குடித்தவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.