மேட்டுப்பாளையம்,
கோடை மழை துவங்கியதால் இடப்பெயர்ச்சிக்கு லட்சக்கணக்கில் கடந்து செல்லும் பல வண்ண பட்டாம் பூச்சிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.

இயற்கையை அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு இன்றியமையாதது. மலைக்காடுகளிலும் அடர்ந்த வனங்களிலும் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்களின் பரவலுக்கு இந்த பட்டாம்பூச்சியின் மகரந்த சேர்க்கையே முக்கிய காரணம். ஒரு பகுதியில் பட்டாம்பூச்சிகள் அதிகளவில் தென்பட்டால் அங்கு இயற்கை சூழல் சரியாக உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

இந்த சின்னஞ்சிறிய பட்டாம்பூச்சிகள் நிலத்தில் வாழும், மிகப்பெரும் உயிரினமான காட்டுயானை கூட்டங்களைப்போல ஆண்டுக்கு இருமுறை பருவ சூழலுக்கு ஏற்றார் போல் இடப்பெயர்ச்சி செய்யும் இயல்புடையது. தென்மேற்கு பருவமழையின் துவக்க காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பறக்க துவங்கும் இவை கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை சென்றடையும். இதேபோல், இனவிருத்திக்கு பின்னர் அங்கிருந்து வடகிழக்கு பருவமழையின் துவக்க காலத்தில் மீண்டும் புதிய பூச்சிகளின் கூட்டமாக கிழக்குதொடர்ச்சி மலைக்காட்டில் இருந்து மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடையும். இந்த இடப்பெயர்ச்சி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறாமல் தொடரும் ஒரு இயற்கை சார்ந்த நிகழ்வு.

இதனடிப்படையில், கோவை மாவட்டத்தை ஓட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் வழக்கமாக ஜூன் இரண்டாம் வாரத்தில் பெய்ய துவங்கும் தென்மேற்கு மழையின் போது பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சியும் துவங்கும். பருவ மழை காலத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் மலர்களில் மட்டுமல்லாது மண்ணில் உள்ள தாது பொருட்களை உறிஞ்சும். தேவையான சத்துக்கள் கிடைத்தபின் நீண்ட தூர பயணமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கிழக்கு தொடர்சி மலைப்பகுதிகளுக்கு இனப்பெருக்கதிற்காக இடம்பெயரும். மழையும் அதனால் ஏற்படும் பசுமையும் இவற்றின் இடம்மாறுதலுக்கு மிக மிக அவசியம் என்பதால் பருவ மழையின் வருகையை பொறுத்தே இவற்றின் இடப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமுள்ள மே மாத துவக்கத்தில் இருந்தே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழைக்காலம் துவங்கிவிட்டது போல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதி மலைக்காடுகள் பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் மாறிவிட்டதால் வண்ணத்துப் பூச்சிகளின் உற்சாக இடப்பெயர்வும் முன்கூட்டியே துவங்கிவிட்டது. இது போன்ற இடப்பெயர்ச்சி காலங்களில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகளின் வருகை மிக அதிகமாக காணப்படும் சில இடங்களில் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதி முதன்மையானது. இங்கு இன்னமும் இயற்கை சூழல் பாதிக்கப்படாமல் ஆண்டு முழுவதும் ஒரே சீரான சீதோஷின நிலை நீடிப்பதே காரணம் என தெரிவிக்கும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள், இவற்றின் இடப்பெயர்வு காலங்களில் கல்லார் பகுதியில் எளிதில் காணக்கிடைக்காத மிக அரிய வகை பட்டாம்பூச்சிகளை காணலாம் என்கின்றனர்.

கல்லார் தவிர கோவையின் ஆனைக்கட்டி, சிறுவாணி மலைப்பகுதிகளிலும் இது போல பட்டாம்பூச்சிகள் ஏராளமாக வருகை தந்து பல நாட்கள் தங்கியிருக்கும் என்பதால் இவற்றை கணக்கெடுக்கும் பணியினையும் வனத்துறையினரின் உதவியோடு துவங்கியுள்ளனர் பட்டாம் பூச்சி ஆர்வலர்கள். இதன் மூலம் தமிழகத்தில் காணப்படும் சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகளின் தற்போதைய நிலை என்ன, உயிர்சூழல் மண்டலத்தில் இவற்றின் பங்களிப்பு குறித்து அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் இதன் ஆர்வலர்கள்.

கல்லார் பகுதியில் பறந்து செல்லும் பட்டாம்பூச்சிகளையும் தனது நீண்ட தூர பயணத்திற்கு தேவையான தாது சத்துக்களை உறிஞ்ச ஆங்காங்கே கொத்துக்கொத்தாக அமர்ந்திருப்பதையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

– இரா.சரவணபாபு

Leave a Reply

You must be logged in to post a comment.