கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் மே 14 திங்களன்று நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலானது மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசு அதிகாரப்பூர்வமாக அரங்கேற்றிய படுபயங்கரமான ஜனநாயக படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விடுத்திருந்த கடுமையான கண்டன கணைகள், அன்றைய தினம் மாலையே மாநிலம் முழுவதும் இடது முன்னணியினர் நடத்திய ஆவேசமிக்க போராட்டத்தில் வெளிப்பட்டது. தேசிய செய்தி ஊடகங்களை பொறுத்தவரை, திரிணாமுல் அரங்கேற்றிய வன்முறை வெறியாட்டம் என்பது வெறுமனே ஒரு தேர்தல் மோதல் மட்டுமே. அடுத்த நாள் தேசிய ஊடகங்களுக்கு கர்நாடக தேர்தல் உள்ளிட்ட செய்திகள் கிடைத்துவிட்டன.
ஆனால் மேற்குவங்கத்தில் ஒட்டுமொத்த மாநிலமே திரிணாமுல் குண்டர்களின் கோரப் பிடியில் சிக்கி தவிப்பதும், எதிர்க்கட்சிகளில் குரல்வளை நெரிக்கப்படுவதும் அதற்கு தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு இருப்பதும், தேர்தல் ஜனநாயகம் என்ற நடைமுறையையே முற்றாக சீர்குலைத்துள்ளது என்பதே உண்மை.

திரிணாமுல் குண்டர்களின் கோரத் தாண்டவத்தால் 16 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும் கூட, தேசிய ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் தேபுதாஸ், அவரது மனைவி உஷா தாஸ் ஆகியோர் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்ட பயங்கரத்தை திரிணாமுல் வேட்பாளரே குண்டர்களோடு சென்று அரங்கேற்றியதை, கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டு சொன்னபோது, பத்திரிகையாளர்களின் கண்கள் கலங்கின.பத்திரிகையாளர்களும் கூட, இந்த தேர்தலில் திரிணாமுல் குண்டர்களால் விட்டுவைக்கப்படவில்லை. பல இடங்களில் உண்மை நிலவரத்தை படம் பிடிக்கச் சென்ற பல்வேறு பத்திரிகைகளின் செய்தியாளர்கள், புகைப்பட நிருபர்கள், வீடியோ கிராபர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொடூரமாக தாக்கப்பட்டார்கள்.மம்தா கட்சியினரின் ரத்தவெறிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் தைப்பூர் ரஹ்மான், ஜோகேஸ்வர் கோஷ், அபுமன்னா உள்ளிட்டோரும் இரையாகினர்.

தேர்தல் நடைபெற்ற மே 14 அன்று உச்சகட்டத்தை எட்டிய மம்தா கட்சியினரின் வெறியாட்டம், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு நடைபெற்று வருகிறது. துப்பாக்கிகளின் துணையோடு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் ‘போட்டியின்றி’ தனதாக்கிக் கொண்டது. போட்டியிருந்த இடங்கள் அனைத்திலும் தேர்தலை நடக்கவிடாமல் செய்வதற்காக தேர்தல் களத்தையே கொலைக்களமாக மாற்றியது.கூச்பிகாரின் மாநில அமைச்சர் ரவீந்திரநாத் கோஸ் என்பவரே தலைமை தாங்கி, வாக்குச் சாவடிகளை கைப்பற்றினார். எதிர்க்கட்சி வாக்குச் சாவடி முகவர்களை அடித்து நொறுக்கினார். மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வாக்குச் சாவடிகள் துப்பாக்கிமுனையில் கைப்பற்றப்பட்டன. ஜல்பைகுரியில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளிலிருந்து எதிர்க்கட்சி முகவர்கள் அடித்து வெளியேற்றப்பட்டனர். மால்டாவில் வாக்காளர்கள் மீதே திரிணாமுல் குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கிழக்கு பர்துவானில் அனைத்து வாக்குச் சாவடிகளும் துப்பாக்கி ஏந்திய குண்டர்களால் கைப்பற்றப்பட்டன. மேற்கு பர்துவானிலும் இதே காட்சிகள். வடக்கு 24 பர்க்கானாவில் அதிகாலை முதலே எண்ணற்ற வாகனங்களில் கொடிய ஆயுதங்களுடன் கூடிய கும்பல்கள் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுத்தன. தெற்கு 24 பர்க்கானாவில் திரிணாமுல் காங்கிரசாரும், போலீசாரும் கூட்டுச் சேர்ந்து எதிர்க்கட்சியினரை தாக்கினர். ஹுக்ளி, ஹவுரா, பங்குரா, முர்சிதாபாத், வடக்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு, வாக்குச் சாவடி கைப்பற்றல், வாக்குப் பெட்டிகள் உடைப்பு, தீவைப்பு, இடது முன்னணி ஊழியர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைகள் கிட்டத்தட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடந்துள்ளன.
மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடது முன்னணி ஊழியர்கள் படுகாயமடைந்து ரத்தம் சிந்தியுள்ளனர்.இந்த சம்பவங்கள் தொடர்பாக, நூற்றுக்கணக்கான புகார்களை மாநில தேர்தல் ஆணையத்திற்கு இடது முன்னணி ஊழியர்கள் அனுப்பிய வண்ணம் இருந்தார்கள். ஒரு புகாருக்கு கூட தேர்தல் ஆணையம் செவிசாய்க்கவில்லை. எங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் கண்காணிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். பல இடங்களில் தேர்தல் அலுவலர்களே தாக்கப்பட்டு வாக்குச் சாவடிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள். பல இடங்களில் வாக்குச் சாவடிகள் கொளுத்தப்பட்ட போதிலும், போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அடி வாங்கிய போதிலும், மக்கள் அமைதியாக இருக்கவில்லை.

இந்த அனைத்து இடங்களிலும் திரிணாமுல் குண்டர்களுக்கு எதிராக – அவர்கள் துப்பாக்கிகளை பிரயோகித்த போதிலும் கூட – அனைத்து தரப்பு கிராம மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்ற சம்பவங்களும் நடந்துள்ளன. பல இடங்களில் திரிணாமுல் குண்டர்களை அடித்து வெளியேற்றிய நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. நாடியா, தெற்கு 24 பர்க்கானா, வடக்கு தினாஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்களை விரட்டியடித்த பொதுமக்கள், ஆயுதங்களோடு தங்கள் கைகளில் சிக்கிய குண்டர்களை ஆத்திரம் தீர அடித்து நொறுக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படி 4 பேர் உயிரிழந்த தகவல்களும் பதிவாகியுள்ளன.மம்தா ஆட்சி வந்த பிறகு முதல்முதலாக திரிணாமுல் கட்சியின் ஆயுதமேந்திய கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக மக்களே ஒன்றுதிரண்டு ஆயுதங்களை கையிலெடுத்து அடித்து விரட்டிய சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளன.எனவே, திரிணாமுல் வெறியாட்டத்திற்கு எதிராக – ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மேற்குவங்க மக்கள் மிகப் பெரிய பதிலடி கொடுப்பார்கள் என்பதும் இந்த தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது.

கொல்கத்தாவிலிருந்து தேபசிஸ் சக்கரவர்த்தி… படங்கள்: கணசக்தி

Leave a Reply

You must be logged in to post a comment.