பெங்களூரு

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முழுவதுமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களிலும் மற்றவை இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.  மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடித்தால் மட்டுமே தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க முடியும். ஆனால் தற்போது எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே 38 இடங்களை பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த கட்சியே யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.

பாஜக பாணியில் காங்கிரஸ் பதிலடி
கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜனதா பின்பற்றிய  பாணியை தற்போது காங்கிரஸ் கையில் எடுக்கிறது. அதன்படி காங்கிரஸ் தனது ஆதரவை மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு அளித்து குமாரசாமியை முதல்வராக முன்நிறுத்தியிருக்கிறது. மேலும் சுயேச்சையாக வென்ற இருவரையும் காங்கிரசே தற்போது கைகுள் வைத்திருக்கிறது.  இதனை மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஏற்றுக்கொண்டு அமைச்சர்கள் பங்கீடு வரைக்கு முடிந்திருக்கிறது.  இதனால் பாஜக தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறது. ஏற்கனவே வெற்றியை கொண்டாடி வந்த பாஜகவினர் தற்போது சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர்.
மேலும்  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநரிடம் நாங்களே கோரிக்கை வைப்போம் என கூறியது. அதே போல் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி அனுமதி காங்கிரஸ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆளுநர் சம்மதிக்கவில்லை. முழு முடிவுகளும் வெளியான பின்னர் நான் அழைக்கும் போது வந்தால் போதும் என்று கூறியதாக கூறப்படுகிறது.  இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதாதளம்  ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக  கவர்னருக்கு காங்கிரஸ் கடிதமும் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மாநிலத்தில் அதிகமான இடங்களை பிடித்திருக்கும் பாஜகவையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இரண்டு வார காலத்தில் தனது மெஜாரிட்டியை நிருபிப்பார் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

கோவா மற்றும் மணிப்பூரில் நடந்தது என்ன?
40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபைக்கு 2017 தொடக்கத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 13 இடங்களும் கிடைத்தன. இதுதவிர, மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகள் தலா 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளனர். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வென்றது.
இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவானது. இதற்கிடையே, தற்போது ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா அரசியலுக்கு திரும்பி முதல்வராக பதவியை ஏற்பது என முடிவு செய்தனர்.

இதையடுத்து மனோகர் பாரிக்கர் பனாஜி நகரில் கோவா கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து, தனக்கு 22 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். கோவா பார்வர்டு கட்சி, மராட்டியவாடி கோமந்த கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த தலா 3 எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஆகியோர் தன்னை ஆதரிப்பதாக கூறி அவர்களுடைய ஆதரவு கடிதத்தையும் அப்போது கவர்னரிடம் மனோகர் பாரிக்கர் வழங்கினார். இதனையடுத்து பா.ஜனதா ஆட்சி அமைத்தது.

மணிப்பூர்
மணிப்பூர் மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 60. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 28 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 21 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க மேலும் 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு மேலும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில், 4 உறுப்பினர்களை கொண்ட தேசிய மக்கள் கட்சி, ஒரு உறுப்பினரை கொண்ட லோக் ஜனசக்தி ஆகியவை பாரதீய ஜனதாவை ஆதரிக்க முன்வந்தது.
மேலும் 4 உறுப்பினர்களை கொண்ட நாகா மக்கள் முன்னணி மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை பாரதீய ஜனதா வகுத்தது. பிற கட்சிகளை தன்வரிசையில் இழுத்த பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமையை கோரியது.  அதன்படி அங்கும் பாரதீய ஜனதாவே ஆட்சியில் அமர்ந்தது.
இதே பாணியை தற்போது காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது. ஆனால் ஆளுநராக இருப்பது ஆர்எஸ்எஸ் நபர் ஆவார். ஆகையால் ஆளுநரே எடியூரப்பாவைத்தான் ஆட்சியமைக்க ஆர்எஸ்எஸ் தலைமையகம் உத்தரவிடும் அதன்படியே ஆளுநரும் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை தனிப்பெரும்பான்மையை எடியூரப்பான நிருபிக்க எடுக்கும் கால அவகாசம் வரை பாஜகவினரிடம் இருந்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பாற்ற கட்சி எம்எல்ஏக்களை அந்த கட்சியினர் பாதுகாப்பாக வைத்திருந்தால் பாஜக தவிர்த்த ஆட்சி அமைய கர்நாடகாவில் வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.