பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ராமநகரம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் பாஷா-வை 22 ஆயிரத்து 636 வாக்குகள் வித்தியாசத்திலும், சென்னப்பட்னா தொகுதியில் பாஜக வேட்பாளர் யோகேஸ்வாராவை சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வீழ்த்தினார்.

அதேபோல பாஜக தலைவர் எடியூரப்பா, தான் போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் கோனி மலடேசாவை விட 35 ஆயிரத்து 395 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் ஜி.டி. தேவ கவுடா என்பவரிடம் 36 ஆயிரத்து 42 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். மற்றொரு தொகுதியான பதாமி-யில் வெற்றிபெற்றாலும், 1696 வாக்கு வித்தியாசத்திலேயே இங்கு அவர் தப்பிப் பிழைத்துள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் ஜி. பரமேஸ்வரா, டி.கே. சிவகுமார், எம்.பி. பாட்டில், ஜமீர் அகமது கான், பாஜக தலைவர்கள் ஈஸ்வரப்பா, சோமசேகர ரெட்டி, பி.ஸ்ரீராமுலு உள்ளிட்டோரும் தத்தம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். பி.ஸ்ரீராமுலு 2 தொகுதியில் போட்டியிட்ட நிலையில், பதாமியில் தோல்வியைத் தழுவினார்.

பகுஜன் சமாஜ் வெற்றி
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி இங்கு தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் கொள்ளேகால் தனித் தொகுதியில் மட்டும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மகேஷ் வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் மகேஷ். இவர் இத்தொகுதியில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார். இத்தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. வெற்றிபெற்ற மகேஷை கட்சியின் தலைவர் மாயாவதி தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: