பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கர்நாடக ஆளுநரும், ஆர்எஸ்எஸ்காரருமான வஜூபாய் ருடாபாய் வாலா மூலம், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. குதிரை பேரம் மூலம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போடும் வேலையில் பாஜக தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு, மணிப்பூர், மேகாலயா மற்றும் கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. எனினும் ஆளுநர்கள் மூலம் குறுக்கு வழியில் பாஜக ஆட்சியை தட்டிப் பறித்தது. அதே திட்டத்தை கர்நாடகத்திலும் செயல்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது.கடந்த மே 12-ஆம் தேதி நடைப்பெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று நடைப்பெற்ற நிலையில், இதில், ஆளும் காங்கிரஸ் 78 இடங்களையும், பாஜக 104 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களையும் பிடித்தன.

எனினும், 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 113 இடங்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.
பாஜக 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் அந்தக் கட்சிக்குத் தேவைப்படுகிறது. இதேபோல காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

எத்தனை இடங்கள்?
பாஜக – 104
காங்கிரஸ் – 78
ம.ஜ.தளம் – 37
பகுஜன் சமாஜ்
கட்சி – 1
கர்நாடக ஜனதா
கட்சி – 1
சுயேட்சை – 1

காங்கிரஸ் – ம.ஜ.த கைகோர்ப்பு
இதையடுத்து, 78 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 38 இடங்களை பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்ததுடன், முதல்வர் பதவியையும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமிக்கு விட்டுக் கொடுத்தது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவருமான தேவ கவுடாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்வதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இது கர்நாடகத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசின் ஆதரவு தொடர்பாக தனது தந்தை தேவ கவுடாவுடன் ஆலோசனை நடத்தியதற்குப் பின்னர், அந்த ஆதரவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி, பெரும்பான்மைக்குத் தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு கர்நாடக ஆளுநர் வஜூபாய் ருடாபாய் வாலாவுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் ஆளுநரை நேரில் சந்தித்தும், காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவுக் கடிதத்தை அளித்து, ஆட்சிமைக்க உரிமை கோரினார்.

ஆளுநருடன் எடியூரப்பா சந்திப்பு
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவையில் 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்திருக்கும் தங்களையே ஆட்சிமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் எடியூரப்பாவுடம் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டுள்ளார். அவருடன், மத்திய அமைச்சர் அனந்த்குமார், பாஜக எம்.பி. பி.சி.மோகன் ஆகியோரும் ஆளுநரைச் சந்தித்து, பாஜக-வை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆளுநர் வஜூபாய் வாலா (80), கடைந்தெடுத்த ஆர்எஸ்எஸ்-காரர் என்பதுடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும் ஆவார். குஜராத்தைச் சேர்ந்த இவர், பாஜக ஆட்சியில் குஜராத் மாநில நிதி அமைச்சராகவும், சபாநாயகராகவும் பணியாற்றியவர்.எனவே, பெரும்பான்மையே இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சி என்ற வகையில் ஆளுநரை அழைக்கச் செய்து, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், வஜூபாய் வாலா கொடுக்கும் கால அவகாசத்திற்குள் குதிரை பேரம் மூலம் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை வளைத்து போட்டு விடலாம் என்ற சதி ஆலோசனையில் பாஜக-வினர் இறங்கியுள்ளனர்.

இதனிடையே புதிய ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அமைச்சர் பதவிகளை பங்கிட்டுக் கொள்வது தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தைகளையும் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் துவக்கியுள்ளன.

இதில், 16 அமைச்சர் பதவிகளுடன், முதல்வர் பதவியையும் எடுத்துக் கொள்ளும் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி உட்பட 20 அமைச்சர் பதவிகளை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து சந்திப்பதற்கும் இப்போதே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடியூரப்பா புலம்பல்
காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் திடீர் கூட்டணியால், முதல்வர் கனவு நிறைவேறாமல் போகுமோ? என்று பதற்றம் அடைந்துள்ள பாஜக தலைவர் எடியூரப்பா, பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக புலம்பியுள்ளார்.
காங்கிரசை மக்கள் புறக்கணித்த காரணத்தால்தான், பாஜக தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களில் வென்றுள்ளதாகவும், ஆனால், காங்கிரஸ் மக்களின் தீர்ப்பை மதிக்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், மணிப்பூர், மேகாலயா, கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக கையிலெடுத்த ஆயுதத்தைத்தான் தாங்கள் தற்போது கையிலெடுத்திருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
அதாவது, கடந்த ஆண்டு கோவாவில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வென்றன. மணிப்பூரில் இதேபோல காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 20 தொகுதிகளிலும் வென்றன. எப்படிப் பார்த்தாலும், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரசே தனிப்பெரும் கட்சியாக இருந்தது.

ஆகவே, தனிப்பெரும் கட்சி என்ற வகையில் காங்கிரசைத்தான் ஆட்சியமைக்க ஆளுநர்கள் அப்போது அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாமல், பெரும்பான்மை இருப்பதாக வெறுமனே பாஜக கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் அந்த கட்சியையே ஆட்சியமைக்க அழைத்தனர். அதாவது பாஜக-வின் குதிரை பேரத்திற்கு ஆளுநர்களே வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பாஜக-வும் பணத்தை கொட்டி குதிரை பேரம் நடத்தி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தது.

ஆனால், அதே பாஜக இப்போது தனிப்பெரும் கட்சி என்ற வகையில் தங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்பது வேடிக்கையாக இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.