===பேராசிரியர் கே. ராஜு===
சினிமாவின் உட்பொருள் எதுவாகவும் இருக்கட்டும்.. அது அதிக நேரமோ குறைவான நேரமோ ஓடக்கூடியதாக இருக்கட்டும்.. தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் துடிப்பானதொரு வடிவமே சினிமா என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம். அது பார்வையாளர்களை ஈர்த்து அவர்களுக்கு உடனடி பொழுதுபோக்கினை அளித்து அவர்களின் கவனத்தைக் குவிக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம். ஆடியோவையும் வீடியோவையும் தனித்துவம் வாய்ந்த முறையில் தொகுத்துக் கொடுத்தால் அது பார்வையாளர்களை திரையுடன் கட்டிப் போட்டுவிடும் வல்லமை உடையது. எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், எடிட்டர்கள், பிற தொழில்சார்ந்தவர்கள், புதியதாக பயிற்சி பெறுபவர்கள் அனைவருக்கும் அது இசை, கணினி வரைகலை போன்ற பல்வேறு கலையம்சங்களைப் பயன்படுத்தவும் செழுமைப்படுத்தவும் ஒரு வாய்ப்பினை அளிக்கக் கூடியது. தற்போதைய நவீன உலகில் மின்னணு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் மனிதர்களின், குறிப்பாக இளைஞர்களின், கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றன என்றாலும், இன்னும் பல ஆண்டுகளுக்கு சினிமாவும் டிவியும் மனிதர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவையாகவே விளங்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டே விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே அறிவியலை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஊடகமாக சினிமாவைப் பயன்படுத்துவது என்ற முடிவெடுத்து களத்தில் இறங்கியது. அன்றிலிருந்து இலக்கை அடைவதற்கான எமது முயற்சிகளில் சினிமா ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்து வருகிறது. அதிலும் குறும்படங்கள், ஆவணப்படங்கள், விநாடி-வினா, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நாங்கள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறோம். அது ஒன்றும் அவ்வளவு எளிதாக இல்லை. படைப்பாற்றல் மிக்கவர்களை அறிவியல், தொழில்நுட்பத்துறையில் காலடி எடுக்க வைத்து தகவல்களை சுவாரசியமாகக் கொடுக்க வைப்பதென்பது ஒரு சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது.பத்தாண்டுகளுக்கு முன் இந்திய தேசிய அறிவியல் சினிமா விழா (NSFF) என்று நாங்கள் எடுத்துவைத்த சிறிய அடி இன்று விஞ்ஞான் பிரச்சாரின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்திருக்கிறது. மற்ற சினிமா விழாக்களோடு ஒப்பிடும் அளவுக்கு வளர்ந்து விடவில்லை என்றாலும் அறிவியல் சினிமா தயாரிக்க முன்வந்துள்ள ஒரு சிறிய குழுவினரின் அர்ப்பணிப்பு, உழைப்பு, விடாமுயற்சி, ஆர்வம் ஆகியவை அவர்களை எங்களுடன் கட்டிப் போட்டிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் 40 சினிமாக்கள் என்ற அளவில் தொடங்கி 2018 பிப்ரவரியில் குவஹாதி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 230 சினிமாக்கள் பங்கேற்பு என வளர்ந்திருக்கிறோம். 

அறிவியலை மக்களிடம் கொண்டு சென்று அவர்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்கி வளர்ப்பது என்ற எமது திட்டத்தில் என்எஸ்எப்எப்ஐ மிகக் கேந்திரமான பங்கினை வகித்துவருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள் ஓரிடத்தில் வந்து குழுமி தங்களுடைய படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தியதை நாங்கள் இருகரம் நீட்டி வரவேற்கிறோம். அறிவியல் என்பது ஏதோ விஞ்ஞானிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று ஒதுங்கிவிடாமல், அது நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது, நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற புரிதலை சாதாரண மக்களிடம் எடுத்துச் செல்ல அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மகத்தானது.நடுவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் விளங்கி, விஞ்ஞான் பிரச்சாரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக நின்ற ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அமோல் பலேக்கர், முசாபர் அலி, கௌதம் கோஷ், மதுர் பண்டார்கர், சந்திர பிரகாஷ் த்விவேதி, மைக் பாண்டே, சுஹாசினி மூலே போன்ற அனுபவம் வாய்ந்த திரையுலக மேதைகளுக்கு எங்களுடைய நன்றியையும் பாராட்டினையும் காணிக்கையாக்குகிறோம். இந்த வெற்றிப் பயணம் தொடரட்டும்!

(ஏப்ரல் மாத ட்ரீம் 2047 இதழில் அதன் ஆசிரியர் திரு. சந்தர் மோகன் எழுதியுள்ள தலையங்கம்)

Leave a Reply

You must be logged in to post a comment.