ஈரோடு,
ரேசன் கடை அமைக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா பட்டக்காரன்பாளையம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேசன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இவர்கள் பட்டக்காரன் பாளையத்தில் இருந்து அருகில் உள்ள ஆய்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடையிலேயே பொருள்கள் வாங்கி வருகிறார்கள். அங்கு சுமார் 1300 குடும்ப அட்டைதாரர்கள் இருப்பதால் கடும் நெரிசலும், பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.

ஆகவே, பட்டக்காரன் பாளையத்திலேயே புதியதாக ரேசன் கடை அமைக்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்நது ஒரு அரசாங்க கட்டிடத்தில் புதிய ரேசன் கடை துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், ஒரு சிலரின் எதிர்ப்பு காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் ரேசன் கடை அமைக்கக்கோரி ஞாயிறன்று அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்பின் திங்களன்று குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவை சந்தித்து முறையிட்டதுடன், கோரிக்கை மனுவினை அளித்துச் சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.